நாடாளுமன்றில் இன்று பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

முழுமையான அரசியலமைப்பு திருத்தம் ஒன்றுக்கான ஆரம்பப்படியாக 19வது அரசியல் அமைப்பில் அவசியமான திருத்தம் மற்றும் நடைமுறை முன்னெடுக்கப்படும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் சற்றுமுன் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறுகிய காலத்துக்குள் இந்த முனைப்பு மேற்கொள்ளப்படும். நாட்டின் நிலைமைகள் தொடர்பாக அனைவருக்கும் புரிந்துணர்வு இருக்கிறது.

எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்படும். எந்தவொரு அரசாங்கமும் பொதுமக்களை வேண்டுமென்றே கஸ்டத்துக்கு உள்ளாக்குவதில்லை.

எனினும் இன்று பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இருப்பதை தாம் ஏற்றுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார முகாமைத்துவம் உரியமுறையில் செயற்படாமை காரணமாக இன்றைய நிலை ஏற்பட்டுள்ளது. பிரச்சினைகளுக்கு தீர்வை காண பேச்சுவார்த்தைகள் அவசியம்.

இதன் அடிப்படையிலேயே காலிமுகத்திடலில் போராட்டம் நடத்துவோருடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எரிபொருள் விநியோகத்தில் கிரமமான முறை மற்றும் மலையக பகுதிகளில் மழை பெய்யும் போது மின்சார பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். 
அத்துடன் வரலாறு முழுவதும் எமது நாடு எதிர்நோக்கிய பொருளாதார சவால்கள் தற்போது கடினமான நிலைமைக்கு வந்துள்ளது. மின்சார துண்டிப்பு, எரிபொருள் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு என்பன எமக்கு கண்ணுக்கு தெரியும் கஷ்டங்கள் மாத்திரமே.

இதனால் ஏற்பட்டுள்ள பல கஷ்டங்களையும் மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர் என்பதை நான் அறிவேன். இந்த நெருக்கடியில் இருந்து மீள அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலம் இது என நான் நினைக்கின்றேன்.

அரசியல் ரீதியாக குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் சமயம் இதுவல்ல என நான் நம்புகிறேன். எம் அனைவரையும் மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். யார் உண்மையில் நாட்டை நேசிக்கின்றனர் என்பது தொடர்பில் மக்கள் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர்.

அரசாங்கம் என்ற வகையில் எமது பொறுப்பில் இருந்து நாங்கள் விலகி முடியாது. அத்துடன் இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான திட்டங்களை ஒவ்வொன்றாக முன்வைக்க வேண்டியது அவசியம்.

அரசியல் ரீதியாக எமக்கு இருக்கும் கொள்கை முரண்பாடுகளில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு நாம் முன்னுரிமை வழங்க வேண்டும். இதன் காரணமாகவே ஆளும் கட்சியுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப முன் வருமாறு நாங்கள் எதிர்க்கட்சியினருக்கு நேர்மையாக நோக்கத்தில் அழைப்பு விடுத்தோம்.

அந்த அழைப்பில் தற்போதும் எந்த மாற்றமும் இல்லை. நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் பொருளாதார முகாமைத்துவம் மிக முக்கியம். இதற்காக சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை நாங்கள் நியமித்துள்ளோம்.

அது மட்டுமல்லது சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட சர்வதேச நிதி நிறுவனங்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம். அவர்களிடம் இருந்து எமக்கு சாதகமான பதில்கள் கிடைத்து வருகின்றன.
அத்துடன் எமது நட்பு நாடுகள் பொருளாதார நெருக்கடியை முகாமைத்துவம் செய்ய எமக்கு உதவி வருகின்றன. நிதியமைச்சர் மற்றும் நிதியமைச்சு நாட்டுக்காக தற்போது தமது கடமைகளை சரியாக செய்து வருகின்றனர்.

நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வை காண்பதுடன் மீண்டும் இப்படியான நெருக்கடி ஏற்படாத வகையில் நிரந்த தீர்வுக்காண அடித்தளத்தை இட வேண்டும். எதிர்ப்புக்கு அப்பால் சென்ற தலையீடு அவசியம் என்பதை இதன் காரணமாகவே இதற்கு முன்னர் நான் நினைவு கூறியிருந்தேன்.

நிமிடம் நிமிடமாகவேனும் நாங்கள் மின் துண்டிப்பை குறைப்போம். எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி நேற்று நாட்டு மக்களுக்கு கூறினார்.

எரிபொருள் கிடைக்கும் என்பதால், எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று சந்தேகம் கொள்ள வேண்டாம். 24 மணிநேரத்தில் தீர்வு கிடைக்காவிட்டாலும் நீண்டகாலத்திற்கு நாங்கள் மக்களை வரிசைகளில் நிற்க வைக்க இடமளிக்க மாட்டோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!