ரஷ்யாவுக்கு நம்பகமான நாடாக இந்தியா திகழ்கிறது: துணைத் தூதர் ஒலெக் அவ்தீவ் பெருமிதம்!

இந்தியா – ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான 75-வது ஆண்டு நல்லுறவு கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கம் சென்னையில் உள்ள ரஷ்ய அறிவியல் கலாச்சார மையத்தில் நேற்று நடைபெற்றது. இதை தென்னிந்தியாவுக்கான ரஷ்ய துணைத்தூதர் ஒலெக் அவ்தீவ் தொடக்கிவைத்து பேசும்போது, ‘ரஷ்யாவுக்கு மிகவும் நம்பகமான நாடாகஇந்தியா திகழ்கிறது. பாதுகாப்பு, அறிவியல் உட்பட பல்வேறு துறைகளில் 2 நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
    
தொழில்நுட்பங்கள் பரிமாற்றமும் இருதரப்பின் இடையேயும் நடைபெறுகிறது. அரசியல் சூழல்கள் மாறினாலும் இரு நாடுகளின் உறவு தொடர்ந்து சுமூமாகவே உள்ளது. உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் ரஷ்யாவை தனிமைப்படுத்த அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் அழுத்தங்கள் அளித்தன. எனினும், இந்தியா அந்த நெருக்கடியை சிறப்பாக கையாண்டு ரஷ்யாவுடன் நல்லுறவை தொடர்ந்து வருகிறது’ என்று தெரிவித்தார்.

பிரம்மோஸ் மையத்தின் நிறுவனர் ஏ.சிவதாணுப் பிள்ளை பேசும்போது, ‘இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் மிகச் சிறந்த நட்பு நாடாகரஷ்யா உள்ளது. 1971-ம் ஆண்டு வங்கதேச பிரிவினை, 1998-ல் அணுகுண்டு சோதனை உட்பட பல்வேறு விவகாரங்களில் பெரும்பாலான நாடுகள் நமக்கு எதிராக இருந்தன. அந்தசூழலில் நமக்கு ரஷ்யா மட்டுமே நிபந்தனையின்றி ஆதரவு அளித்தது.
தொடர்ந்து கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், தொழில்கள் உட்பட பல்வேறு துறைகளில் நமக்குஉதவிகளை வழங்கி வருகிறது.

அந்தவகையில் இந்தியாவிடமுள்ள 70 சதவீத ராணுவ தளவாடங்கள் ரஷ்ய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை ஆகும். அதன் அடுத்தகட்டமாகவே இருநாடுகளும் இணைந்துஉலகில் அதிவேகத்தில் செல்லக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணையை வடிவமைத்துள்ளோம். அதேபோல், 1991-ம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடியின்போது ரஷ்யாவுக்கு பக்கபலமாக இந்தியா நின்றது.

உலகளவில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தபோதும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் எவ்வித விரிசலும் ஏற்படவில்லை. ஏனெனில், உணர்வில் கலந்த இந்திய ரஷ்ய நல்லுறவானது என்றென்றும் நிலைத்து நீடிக்கக் கூடியது. ஆட்சிகள் மாறினாலும் இருநாடுகளும் இணைந்தே பயணிக்கும். தற்போதைய நவீன தொழில்நுட்ப காலக்கட்டத்தில் நமது தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதனால் பாதுகாப்பு, விண்வெளி அறிவியல் உள்ளிட்ட துறைகளில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை தவிர்க்க முடியாது’ என்றார்.

நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுஅமைச்சக தலைமை அதிகாரி வெங்கடாசலம் முருகன், இந்திய-ரஷ்ய தொழில் வர்த்தக சபை நிறுவனர் வி.எம்.லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!