வீம்பு கொள்ளும் மனைவி

கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வீம்புதான் முக்கிய காரணமாக இருக்கும். யாராவது ஒருவர் வீம்பை கைவிட்டால்தான் உறவை பலப்படுத்திக்கொள்ள முடியும்.

வீம்பு கொள்ளும் மனைவி
அடுத்தவர்களிடம் பழகும் விதத்தை வைத்துதான் ஒருவருடைய குணாதிசயம் கணிக்கப்படுகிறது. மற்றவர்களிடம் பேசும்போது சிலர் சிறிய விஷயங்களுக்காக கூட கோபம் கொள்வார்கள். அதனால், இருவருக்கு இடையே தேவையில்லாமல் கருத்து மோதல்கள் உருவாகும். அப்போது உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை கொட்டி விடுவார்கள். அது இருவருக்குமிடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்திவிடும்.

ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நெருங்கி பழகியவர்கள் இடையேயும் இதுபோன்ற மனஸ்தாபம் ஏற்படக்கூடும். அதனால் பேசாமல் இருந்துவிடுவார்கள். அது வீம்பாகி விடும். தேவையற்ற அந்த வீம்பு, நல்ல உறவை இழக்க வைத்துவிடும். நிம்மதியையும், மகிழ்ச்சியையும் கெடுத்துவிடும்.

வீம்பை கைவிட்டு ஒருவருக்கொருவர் பேசுவதற்கு முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் மனம் நிம்மதியடையும். வீம்பு இருக்கும் வரைதேவையில்லாத எண்ணங்கள், கற்பனைகள் உதயமாகிக்கொண்டே இருக்கும். அது பல பிரச்சினைகள் தோன்றுவதற்கு வழி வகுத்துவிடும். வீம்பை விட்டொழித்தாலே பிரச்சினைகள் தாமாகவே நீர்த்துப் போய்விடும்.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வீம்புதான் முக்கிய காரணமாக இருக்கும். அப்போது ஒருவருக்கொருவர் பேசாமலே இருப்பதற்கு முயற்சி செய்வார்கள். ஆனால் பேச வேண்டும் என மனம் துடிக்கும். அதற்கு வடிகாலாக குழந்தைகளை பயன்படுத்தி கொள்வார்கள்.

ஒருவருக்கொருவர் பேச வேண்டிய விஷயங்களை குழந்தைகள் முன்னிலையில் கொட்டித்தீர்ப்பார்கள். தூதுவராக நடுநிலை வகிக்கும் குழந்தைகள் இருவரும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கும். இத்தகைய வீம்பின் காரணமாக வெளிப்படும் தேவையற்ற பேச்சுக்கள் குழந்தைகளின் நிம்மதியையும் சீர்குலைத்துவிடும்.

ஒருசிலர் வீம்பின் காரணமாக பிரிந்தும் விடுவார்கள். அது குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடும். சில சமயங்களில் சகோதரர்களுக்கு இடையே தோன்றும் வீம்பு நீண்டகாலமாக ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமலேயே இருக்க வைத்துவிடும். யார் முதலில் பேசுவது என்ற ஈகோ பிரச்சினையே வீம்புக்கு பக்கபலமாக அமைந்து விடும்.

அத்தகைய வீம்பை விட்டுவிட்டு யாராவது ஒருவர் வலிய சென்று பேசிப் பாருங்கள். மற்றொருவர் நிச்சயம் எதிர்பார்த்ததைவிட நன்றாக பேச தொடங்கி விடுவார். அவரும் இந்த சந்தர்ப்பத்திற்காகத்தான் இதுநாள் வரை காத்திருந்திருப்பார். அதனால் பாசத்தை கொட்டி திக்குமுக்காட செய்துவிடுவார். ஆகவே, யாராவது ஒருவர் வீம்பை கைவிட்டால்தான் உறவை பலப்படுத்திக்கொள்ள முடியும்.

Tags: , ,