10 யோசனைகள் அடங்கிய கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான யோசனைகள் அடங்கிய கடிதமொன்றை முன்னாள் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதன்படி 10 யோசனைகள் அடங்கிய கடிதமொன்றை  ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நிதி முகாமைத்துவம் தொடர்பில்  போதியளவு அறிவுடைய  நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிக அளவில் தெரிவு செய்யப்படாமை மற்றும் நாடாளுமன்றம் பேச்சு மன்றமாக மாறியுள்ளமை ஆகிய காரணங்களினால் தற்போதைய பொருளாதார நெருக்கடியை நாடாளுமன்றத்தினால் உணர்ந்து கொள்ள முடியாது போயுள்ளதாக அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தான் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும் முன்னாள் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நிதி தொடர்பான முழுமையான அதிகாரத்தைக் கொண்டுள்ள நாடாளுமன்றம் தனது கடமைகளையும் பொறுப்புகளையும் சரியாக நிறைவேற்றாத காரணத்தினால் நாடு இவ்வாறான பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதற்கமைய தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான 10 யோசனைகளை முன்வைப்பதாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி அமைச்சர்களுக்கான சம்பளத்தைப் பெற்றுக் கொள்ளாத சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளக்கூடிய, நன்கு கற்றறிந்த திறமையான இளைஞர்களைக் கொண்ட 15 பேர் அடங்கிய அமைச்சரவையொன்றை நியமிக்க வேண்டுமென அவர் பரிந்துரைத்துள்ளார்.

அத்துடன், அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடி விடயம் தொடர்பில் அனுபவம் கொண்ட மேலும் 10 அமைச்சர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் முன்னாள் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளைப் பரிந்துரைப்பதற்காக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் தலைமையிலான நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!