புதிய அரசாங்கத்தின் மூலமே நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியும்

புதிய அரசாங்கத்தினால் மாத்திரமே நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தில் பதவிகளை மாற்றுவதன் மூலம் மாத்திரம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. நாட்டில் அரசாங்கம் ஒன்று இருக்கின்றதா?. அரசாங்கத்தை எப்படி கொண்டு நடத்துவது.

அரசாங்கத்தின் ஒரு தரப்பினர் கோட்டாபய இருக்க வேண்டும் என்கின்றனர். சிலர் மகிந்த இருக்க வேண்டும் என்கின்றனர். கேட்டாவை பதவி விலகுமாறும் சிலர் கூறுவதுடன், மகிந்தவை பதவி விலகுமாறு மேலும் சிலர் கூறுகின்றனர். இப்படி அரசாங்கம் ஒன்றை கொண்டு நடத்த முடியுமா?.
இப்படியான அரசாங்கத்திற்கு எந்த சர்வதேச அமைப்பு உதவும்?. இருக்கும் அரசியல் ஸ்திரத்தன்மை என்ன?. அரசாங்கத்திற்கு சீட்டு கட்டை குலுக்கி பிரதமர், அமைச்சர்களை நியமிப்பதில் பயனிலை.

அரசாங்கம் அனைவருக்கும் மத்தியில் பொய்து போய்விட்டது. சர்வதேச ரீதியிலும் இதே நிலைமை. இதனால், அரசாங்கத்தில் சீட்டு கட்டை குலுக்கி, இவர் பிரதமர், இவர்கள் அமைச்சர்கள் எனக் கூறுவது சதத்திற்கும் பிரயோசனமற்றது.

எமது நாட்டிற்கு கடன் வழங்கி சுமார் 40 முதல் 50 தரப்பிடம் முதலில் அரசாங்கம் பேச்சு நடத்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது. இவர்களுடன் பேசி கடனை திருப்பி செலுத்த கால அவகாசத்தை பெற்றுக்கொண்ட பின்னரே சர்வதேச நாணய நிதியம் பேசும்.

சர்வதேச நாணய நிதியம் வழங்கும் நிதியை அரசாங்கத்தினால், திரும்ப செலுத்த முடியுமா என அந்த நிதியம் முதலில் ஆராயும். எப்படி நாம் செலுத்துவது. சர்வதேச நாணயத்திடம் கடனை பெற்ற பின்னர், நாட்டில் பொருட்களின் விலைகள் மீண்டும் 40 வீதமாக அதிகரிக்கும்.

அனைத்து உலக நாடுகளும் கடனை பெறுகின்றன. கடனை பெறும் அந்நாடுகள் முதலீடு செய்து, இலாபத்தை பெற்று, அந்த இலாபத்தில் வட்டியை செலுத்துகின்றன. இப்படித்தான் பணம் புழக்கத்தில் விடப்படும்.

புதிய அரசாங்கம் ஒன்றினால், மட்டுமே நாட்டை அமைதிப்படுத்த முடியும். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால், நாட்டை வழமை நிலைமைக்கு கொண்டு வர மக்கள் கால அவகாசத்தை வழங்குவார்கள்.

அத்துடன் சர்வதேச சமூகமும் அந்த புதிய அரசாங்கத்துடன் கொடுக்கல், வாங்கல்களை ஆரம்பிக்க முடியும். கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஒரு மாதத்திற்கு சமையல் எரிவாயு வராது என அரசாங்கத்தின் முக்கிஸ்தர் ஒருவர் கூறினார்.

இப்படியான நிலைமையே காணப்படுகிறது. நாடாளுமன்றம் தீர்வை வழங்க வேண்டும் என சபாநாயகர் கூறுகின்றார். சபாநாயகர் என்ற வகையில் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் அனைத்தையும் ஜனாதிபதியிடம் வழங்கி விட்டு எங்களிடம் தீர்வை வழங்குமாறு கேட்கின்றீர்கள் என நான் சபாநாயகரிடம் கூறினேன்.

இதன் அர்த்தம் என்ன என்றும் கேட்டேன். நாடாளுமன்றம் காரணமாக இந்த பிரச்சினைகள் ஏற்படவில்லை என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், 20வது திருத்தச் சட்டத்தின் ஊடாக அனைத்து அதிகாரங்களையும் ஜனாதிபதிக்கு வழங்கியதன் காரணமாக இந்த பிரச்சினைகள் உருவாகின.

தற்போது 19வது திருத்தச் சட்டத்தை மீண்டும் கொண்டு வருமாறு அவர்கள் கூறுகின்றனர். அனைத்தையும் ரிவர்ஸ் செய்யும் இவர்கள் 20வது திருத்தச் சட்டத்தை ரிவர்ஸ் செய்ய பார்க்கின்றனர்.

இவர்கள் அரசாங்கத்தை மாத்திரமல்ல மக்களையும் அழிவின் விளிம்புக்கு கொண்டு சென்றுள்ளனர். சௌபாக்கிய நோக்கு என்று கூறி வந்தவர்கள், நாட்டை பிச்சை எடுக்கும் நிலைமைக்குள் தள்ளியுள்ளனர். அனைத்து நாடுகளிடமும் பிச்சை எடுக்கின்றனர்.

கோவிட் தொற்று நோய் காலத்தில் ஆப்கானிஸ்தானை தவிர எம்மை சுற்றியுள்ள சகல நாடுகளிலும் அந்நிய செலாவணி கையிருப்பான 25 வீதம் முதல் 30 வீதமாக அதிகரித்தது. எமது நாட்டில் மாத்திரமே அந்நிய செலாவணி கையிருப்பு பூஜ்ஜியமாகியது எனவும் கிரியெல்ல கூறியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!