பிரதமர் மோடி உண்ணாவிரதம் கேலிக்கூத்து – சரித்திரத்தில் இல்லாதது: சந்திரபாபு நாயுடு ஆவேசம்

பிரதமர் மோடி உண்ணாவிரதம் இருந்தது கேலிக்கூத்தானது. சரித்திரத்தில் இல்லாதது என்று ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கூறினார்.

ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியா முழுவதும் பா.ஜனதா ஆட்சி செய்யாத மாநிலங்களில் உள்ள மக்களை மோடி கஷ்டப்படுத்தி வருகிறார். எங்கள் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தருகிறேன் என்று ஏமாற்றிவிட்டார்.

மோடியை பிரதமர் ஆக்க நான் தான் முயற்சி மேற்கொண்டேன். ஒவ்வொரு கட்சித் தலைவர்களையும் சந்தித்து பேசி மோடிக்கு ஆதரவு அளிக்க ஏற்பாடு செய்தேன்.

இப்போது மோடிக்கு எதிரான யுத்தத்தை நானே தொடங்கியுள்ளேன். நான் நினைத்தால் பா.ஜனதா கட்சியை முகவரி இல்லாமல் செய்து விடுவேன்.

நான் மோடியை எதிர்த்து போர்க்கொடி தூக்கிய பிறகு தான் இந்தியா முழுவதும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒவ்வொரு வீடுகளிலும் மோடிக்கு எதிராக மக்கள் பேசத் தொடங்கி விட்டனர்.

மோடியின் ஆட்சி, ஆங்கிலேயர்களின் ஆட்சியை நினைவுபடுத்துவதாக உள்ளது. நாம் நினைத்தால் பா.ஜனதா ஆட்சியை நாட்டிலேயே இல்லாமல் செய்து விடலாம். நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகு மோடி அடங்கி விட்டார்.

பிரதமரும் பா.ஜனதா கட்சியினரும் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர். ஒருநாட்டின் பிரதமர் உண்ணாவிரதம் இருந்தது கேலிக்கூத்தானது. சரித்திரத்தில் இல்லாதது.

இவ்வாறு அவர் பேசினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!