தம்பி விமர்சிக்கப்படுவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை: சமல் ராஜபக்ச மகிந்தவுக்கு அனுப்பிய செய்தி

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச, ராஜபக்ச குடும்ப சகோதரர்களில் மூத்தவர் என்பதுடன் அந்த குடும்பத்தினரில் இவருக்கு எதிராக குறைவான குற்றச்சாட்டுக்களே முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சமல் ராஜபக்ச, ஜனாதிபதி செயலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் ஊடாக தனது இளைய சகோதரரான பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த உயர் அதிகாரி யார் என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை என்றாலும் ஜனாதிபதி செயலகத்தில் இருக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமான உயர் அதிகாரி காமினி செனரத் என்பது குறிப்பிடத்தக்கது.

சமல் ராஜபக்ச அனுப்பி செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
“எனது சகோதரர்களை விமர்சிப்பதில் பிரச்சினையில்லை, எனினும் எனது தம்பி மகிந்த விமர்சிக்கப்படுவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால், தம்பி மகிந்தவை பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு அறிவியுங்கள்” என சமல் ராஜபக்ச அந்த செய்தியில் கூறியுள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்பட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்தே மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என கடுமையாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ஏதேனும் ஒரு தீர்வை காண்பதற்காக ராஜபக்ச அல்லாத புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என இவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.  

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என கோரி போராட்டம் நடத்தி வரும் மக்கள், கோட்டாபயவை விசரன் என்றும் மகிந்தவை கிழட்டு மைனா என்றும் விமர்சித்து கோஷங்களை எழுப்பி வருவதை காணக் கூடியதாக இருக்கின்றது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!