சீனர்களின் சுற்றுலா விசாவை ரத்து செய்த இந்தியா!

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா பெருந்தொற்று கண்டறியப்பட்டு வெளியுலகுக்கு தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, சீனாவில் உள்ள பல்கலை கழகங்களில் படித்து வந்த ஏறக்குறைய 22 ஆயிரம் இந்திய மாணவர்கள் வரை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அதன்பின்னர் அவர்களை சீனாவுக்கு திருப்பி அழைத்து கொள்ளும்படி இந்தியா தரப்பில் பல முறை வேண்டுகோள் வைக்கப்பட்டும் அது ஏற்கப்படவில்லை. அவர்களை சீனாவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு அனுமதி மறுத்து விட்டது.
    
இதன் எதிரொலியாக இந்திய மாணவர்கள் சீனாவில் தங்களது படிப்பை தொடர முடியாமல் கைவிட கூடிய சூழல் காணப்படுகிறது.

இந்த நிலையில், சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமைப்பு (ஐ.ஏ.டி.ஏ.) சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, சீன நாட்டினருக்கு வழங்கிய சுற்றுலா
விசாக்கள் இனிமேல் செல்லுபடியாகாது என தெரிவித்து உள்ளது.

தொடர்ந்து, இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட பயணிகளின் விவரங்களையும் வெளியிட்டு உள்ளது. இதன்படி, பூடான், இந்தியா, மாலத்தீவுகள் மற்றும் நேபாளம் ஆகிய நாட்டை சேர்ந்தவர்கள், இந்தியாவால் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட பயணிகள், விசாவுடன் கூடிய பயணிகள் அல்லது இந்தியாவால் வழங்கப்பட்ட இ-விசா வைத்திருப்போர், இந்திய குடிமகன் என்பதற்கான அட்டை அல்லது கையேடு வைத்திருக்கும் பயணிகள், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பதற்கான அட்டையை கொண்டுள்ள பயணிகள் மற்றும் தூதரக பாஸ்போர்ட் வைத்திருக்கும் பயணிகள் ஆகியோருக்கு இந்தியாவுக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, 10 ஆண்டுகள் செல்லுபடியாக கூடிய சுற்றுலா விசாக்களும் இனி செல்லுபடியாகாது என தெரிவித்து உள்ளது. இதனால், பல ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களின் கல்வி சூழலுக்கு ஓர் இணக்கம் சார்ந்த நிலைப்பாட்டை எடுப்பதில், சீனா தயக்கம் காட்டி அவர்களது எதிர்கால வாழ்வை கேள்விக்குறியாக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதற்கு பதிலடியாக இந்தியா இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது என கூறப்படுகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!