பிரான்சில் மீண்டும் ஆட்சியை பிடித்த மேக்ரான்: முக்கிய நகரங்களில் வெடித்த கலவரம்!

பிரான்ஸ் ஜனாதிபதியாக இமானுவல் மேக்ரான் மீண்டும் தெரிவான நிலையில் முக்கிய நகரங்களில் கலவரம் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதியாக மீண்டும் இமானுவல் மேக்ரான் தெரிவாகியுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட மரீன் லீ பென் 41.8% வாக்குகள் பெற்று வெற்றிவாய்ப்பை இழந்துள்ளார். இந்த நிலையில், மத்திய பாரிஸில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கலவரத் தடுப்புப் பொலிசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட கூடியிருந்த பெரும்பாலான இளைஞர்களின் கூட்டத்தை கலைக்க காவல்துறை முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

பிரான்சில் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தக் கூடிய அபாயகரமான
சூழலை இமானுவல் மேக்ரானின் வெற்றி தவிர்த்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், மேக்ரான் வசதியான வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், வாக்களிக்காதவர்களின் எண்ணிக்கை 1969க்குப் பிறகு மிக அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது, மட்டுமின்றி கணிசமான வாக்காளர்கள் மேக்ரான் அல்லது லீ பென்னுக்கு வாக்களிக்க விரும்பவில்லை என்றே தெரிய வந்துள்ளது.

இதனிடையே, பாரிஸில் உள்ள சோர்போன் மற்றும் பிற பல்கலைக்கழகங்களுக்கு வெளியே மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து, தேர்வில் தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து மேக்ரான் திரளாக கூடியிருந்த ஆதரவாளர்களுக்கும் நாட்டுமக்களுக்கும் தமது நன்றியையும் நம்பிக்கையையும் வெ:ளிப்படுத்தியுள்ளார்.

தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் துல்லியமாக மேக்ரான் வெற்றியை பதிவு செய்திருந்தது. இதனையடுத்து இன்று மாலை ஈபிள் கோபுரத்தின் அருகாமையில் பேரணியுடன் தமது வெற்றியை மேக்ரான் கொண்டாடியுள்ளார்.

பாரிஸ் நகரில் திரண்டிருந்த ஆதரவாளர்கள், மேலும் ஐந்து ஆண்டுகள் என முழக்கமிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். தேர்தல் வெற்றியுரையின்போது, இனி தாம் ஒரு கட்சியின் வேட்பாளர் அல்ல எனவும், ஒட்டுமொத்த பிரான்ஸ் மக்களின் ஜனாதிபதி எனவும் மேக்ரான் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பலர் தீவிர வலதுசாரிக்கு வாக்களித்துள்ளனர். ஏனென்றால் அவர்களுக்குள் கோபம் உள்ளது. அது என்னவென்று கண்டறிந்து அதை நிவர்த்தி செய்வேன் எனவும் மேக்ரான் உறுதியளித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!