ஜனாதிபதியை விரட்ட முடியாது! – 11 பங்காளிக் கட்சிகள் முடிவு.

அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை என்பதே மக்களின் நிலைப்பாடாகும். அதே நிலைப்பாட்டிலேயே நாமும் உள்ளோம். ஆனால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரத்தில் இருக்க வேண்டும். ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்குவதே சிறந்த தீர்வாகும். ஜனாதிபதியையும் விரட்டிவிட்டு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என, அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 பங்காளிக் கட்சிகள் தெரிவித்துள்ளன.
   
அரசாங்கத்தில் உயரிய பதவிகளில் இருந்து கொண்டு தீர்மானம் எடுக்கும் ஒரு சில நபர்களினாலேயே நாடு இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே பிரதமர் உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலகவேண்டும். ஜனாதிபதி தலைமையில் சர்வ கட்சி அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும். அதுவே அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சுயாதீன அணியினரின் நிலைப்பாடாகும்.

பிரதமர் தலைமையிலான அரசாங்கம் உடனடியாக பதவி விலகும் என்றால் அடுத்ததாக சர்வ கட்சி அரசாங்கத்தை உருவாக்கி உடனடியாக முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்களை கையாள முடியும். அவ்வாறு அல்லாது தொடர்ச்சியாக நாமே அதிகாரத்தில் இருப்போம் என ராஜபக் ஷர்கள் நினைத்தால் எமக்கும் மாற்று தெரிவு ஒன்றுமே இல்லாது பிரதமருக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரவேண்டிவரும். அதற்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது எனவும் சுயாதீன குழுவினர் தெரிவித்தனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!