அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்க சீன நிறுவனங்களுடன் சிறிலங்கா பேச்சு

அம்பாந்தோட்டை துறைமுகம் அருகே, 3 பில்லியன் டொலர் செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை நிறுவுவது தொடர்பாக, இரண்டு சீன நிறுவனங்களுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்தி வருவதாக உயர்மட்ட சிறிலங்கா அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் மேர்ச்சன்ட்ஸ் போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தினால், 99 ஆண்டு குத்தகைக்குப் பெறப்பட்டுள்ள அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை அமைக்க சிறிலங்கா திட்டமிட்டுள்ளது.

இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைப்பதற்கான கூட்டு முயற்சி திட்டம் ஒன்றை இரண்டு சீன நிறுவனங்கள் முன்வைத்திருப்பதாக சிறிலங்கா முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் மங்கள யாப்பா தெரிவித்தார்.

ஆண்டுக்கு 5 மில்லியன் தொன் எண்ணெயை சுத்திகரிக்கும் வகையிலான இந்த ஆலைக்கான முதலீடு 2.5 பில்லியன் தொடக்கம் 3 பில்லியன் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

எனினும், இந்த திட்டத்தை முன்வைத்துள்ள சீன நிறுவனங்களின் பெயர்களை அவர் வெளியிடவில்லை.

“இந்த முதலீடு பாரியது. சீன நிறுவனங்கள் இரண்டுடனும் நாங்கள் பேச்சுக்களை நடத்தி வருகிறோம்.

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு 500 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. நிலத்தை நாம் ஒதுக்கி வைத்திருக்க முடியாது. பலர் முதலில் நிலத்தைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கிறார்கள். அதற்குப் பின்னரே முதலீட்டாளர்களைத் தேடுகிறார்கள்.” என்றும் அவர் தெரிவித்தார்.

எனினும் இந்த திட்டம் தொடர்பான விரிவான தகவல்களை வெளியிட அவர் மறுத்துள்ளார்.

Tags: , ,