சிறிலங்காவின் முதல் நாடாளுமன்றம் கூடி 70 ஆண்டுகள் நிறைவு – சிறப்பு அமர்வுக்கு ஏற்பாடு

சிறிலங்காவின் முதல் நாடாளுமன்றம் கூட்டப்பட்டு, 70 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் எதிர்வரும் ஒக்ரோபர் 3ஆம் நாள் பிற்பகல் 2.30 மணிக்கு சிறப்பு அமர்வு ஒன்று இடம்பெறவுள்ளது.

வியாழக்கிழமை நடந்த நாடாளுமன்ற நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்தார்.

இலங்கை நாடாளுமன்றம் முதல் முறையாக 1947 ஒக்ரோபர் 14ஆம் நாள், சபாநாயகர் அல்பிரெட் பிரான்சிஸ் மொலமூர் அல்பேர்ட் பீரிஸ் தலைமையில் கூடியது.

1947 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 23 ஆம் நாள் தொடக்கம், செப்ரெம்பர் 20 ஆம் நாள் வரையான 19 நாட்கள் நடந்த பொதுத் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இதில் இடம்பெற்றனர்.

நான்கு ஆண்டுகள் ஐந்து மாதங்கள் செயற்பட்ட முதல் நாடாளுமன்றம், 1952 ஏப்ரல் 8ஆம் நாள் கலைக்கப்பட்டது.

முதல் நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வை, இலங்கையின் அப்போதைய ஆளுனர் சேர் ஹென்றி மொனேக் மாசன் மூர் ஆரம்பித்து வைத்தார்.

சிறிலங்கா சுதந்திரம் பெற்ற பின்னர், இரண்டாவது அமர்வு 1948 பெப்ரவரி 10 ஆம் நாள், இடம்பெற்றது.

முதல் நாடாளுமன்றத்தின் 95 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி, லங்கா சமசமாசக் கட்சி, பொல்ஸ்விக் லெனினிசக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, தொழிற்கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கை இந்திய காங்கிரஸ், ஐக்கிய இலங்கை காங்கிரஸ், சுவராஜ் கட்சி, மற்றும் சுயேட்சைகள் போட்டியிட்டனர்.

பதிவு செய்யப்பட்ட 751,432 மொத்த வாக்காளர்களில், 39.81 வீத வாக்குகளை பெற்று ஐக்கிய தேசியக் கட்சி 42 ஆசனங்களைக் கைப்பற்றியது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான டி.எஸ் சேனநாயக்க முதல் நாடாளுமன்றத்தின் மூலம் நாட்டின் முதலாவது பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். எதிர்க்கட்சித் தலைவராக என்.எம்.பெரேரா பணியாற்றினார்.

முதலாவது நாடாளுமன்றத்தின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களாக புளோரன்ஸ் சேனநாயக்க, குசும்சிறி குணவர்த்தன, தாமரா குமாரி இலங்கரத்ன ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , , ,