158.5 மில்லியன் டொலருக்கு ரஷ்ய போர்க்கப்பலை வாங்குகிறது சிறிலங்கா

ரஷ்யாவிடம் இருந்து சிறிலங்கா கடற்படைக்காக, 158.5 மில்லியன் டொலர் பெறுமதியான ஜிபார்ட் 5.1 (Gepard 5.1) ரகத்தைச் சேர்ந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஒன்று கொள்வனவு செய்யப்படவுள்ளது.

இந்தக் கொள்வனவு தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு, ரஷ்யா வழங்கிய 300 மில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ், இந்த போர்க்கப்பல் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

இந்தக் கடன் திட்டத்தில் 165 மில்லியன் டொலர் பயன்படுத்தப்பட்டு விட்ட நிலையில், 2015 வரை பயன்படுத்தப்படாதிருந்த 136 மில்லியன் டொலர் கடன் திட்டம் காலாவதியாகி விட்டது என்று சிறிலங்கா அதிபர் அமைச்சரவையில் தெரிவித்திருந்தார்.

எனினும், 135 மில்லியன் டொலர் கடன் திட்டத்துக்கான காலஎல்லையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்க ரஷ்யா விரும்பம் தெரிவித்துள்ளது என்றும் சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் அரச இராணுவ உற்பத்தி ஏற்றுமதியாளரான Rosoboron export நிறுவனத்திடம் இருந்து ஜிபார்ட் போர்க்கப்பலை வாங்குவதற்கு சிறிலங்கா திட்டமிட்டுள்ளது.

இந்தக் கப்பலில் படையினருக்குப் பயிற்சி அளிப்பதற்கு மேலதிகமாக 7 மில்லியன் டொலரை சிறிலங்கா செலவிட நேரிடும்.

இதுபோன்றதொரு போர்க்கப்பல் தேவை என்று சிறிலங்கா கடற்படை கோரியிருந்தது, இதனைக் கொள்வனவு செய்வதற்கு ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தப் போர்க்கப்பலில் பொருத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் தளபாடங்களை உள்ளடக்கியதாக, கப்பலுக்கான மொத்த செலவு 158.5 மில்லியன் டொலராகும். இதில், 135 மில்லியன் டொலர் ரஷ்ய கடனுதவியுடன் சிறிலங்கா அரசாங்கத்தின் 15 வீத பங்களிப்பும் இருக்கும்.

ரஷ்யாவிடம் பெறப்படும் கடனை ஐந்து ஆண்டு விலக்குடன், 10 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: , ,