புலிகளை அடக்கிய பொன்சேகாவுக்கு திருடர்களை பிடிக்கும் வேலை!

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் அமையவுள்ள அரசாங்கத்தின் கீழ் திருடர்களை பிடிக்கும் பொறுப்பு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கே வழங்கப்படும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தெரிவித்தார்.
    
அடக்குமுறை மிக்க கொடுங்கோல் அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த “சுதந்திரத்திற்கான போராட்டம்” ஐக்கிய சக்தி பாத யாத்திரையின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று கலிகமுவ நகரில் ஆரம்பமாகியது.

இந்த பாத யாத்திரையில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் உட்பட இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்களின் பணத்தை திருடிய குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தண்டிக்கும் பொறுப்பு சார் அதிகாரம், முப்பது வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த சரத் பொன்சேகாவிடம் கையளிக்கப்படும்.

30 மாதங்களுக்குள் ராஜபக்ச குடும்பம் நமது நாட்டை வங்குரோத்து அடைந்த நாடாக மாற்றிவிட்டது. இந்நாட்டின் தேசிய வளங்கள், தேசிய சொத்துக்கள், தேசிய நிதி என்பவற்றை திருட்டுத்தனமாக கொள்ளையடித்ததன் காரணமாகவே நாடு இவ்வளவு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊழலையும் திருட்டையும் கட்டுப்படுத்தும் முகமாக சுதந்திரமான சக்தி வாய்ந்த ஒரு நிறுவன கட்டமைப்பை ஸ்தாபிப்பதாகவும், அதை எந்த வகையிலும் மாற்ற முடியாதவாறு நிரந்தர நிறுவனமாக அதிகாரமளிக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்திக்கு வேறு எவருடனும் எந்த டீலும் இல்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்நாட்டில் உள்ள 220 இலட்சம் மக்களுடனேயே தனக்கு டீல் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!