எதிர்வரும் நாட்களில் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்பும்!

எதிர்வரும் நாட்களில் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்பும் என வர்த்தகத்துறை அமைச்சர் செஹான் சேமசிங்க கட்சி தலைவர்களிடமும்,தெரிவுகுழு உறுப்பினர்களிடமும் தெரிவித்தார்.
    
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் வியாழக்கிழமை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற பாராளுமன்ற விவகாரம் தொடர்பிலான தெரிவு குழுவிற்கு எரிபொருள், மின்சாரம் மற்றும் எரிவாயு விநியோக கட்டமைப்பில் காணப்படும் நெருக்கடி நிலைமை தொடர்பில் கலந்துரையாடலை முன்னெடுக்க வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜயசேகர,வர்த்தகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர் செஹான் சேமசிங்க உட்பட அவ்விரு அமைச்சின் செயலாளர்கள் உட்பட அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்.

எரிபொருள் மற்றும் எரிவாயு மற்றும் மின்சாரம் ஆகிய சேவை விநியோக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் கட்சி தலைவர்கள் உட்பட தெரிவு குழுவின் உறுப்பினர்கள் அமைச்சர்களுடனும், அதிகாரிகளுடனும் கலந்துரையாடியுள்ளனர்.
இந்திய எண்ணெய் நிறுவனம் மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒன்றினைந்து எரிபொருள் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த தற்போது பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர இதன்போது குறிப்பிட்டார்.

எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்கு முத்துராஜவெல முனையத்தின் நடவடிக்கைகள் 24 மணித்தியாலமும் இடம்பெறுகின்றன. நிலைமையை சீர்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்படுகிறார்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களை தேசிய மின்கட்டமைப்பில் இணைத்துக்கொள்வதில் காணப்படும் பாதிப்பு குறித்து தெரிவு குழுவில் விசேட அவதானம் செலுத்தப்பட்டது.அதற்கமைய சர்வ கட்சி குழு ஒன்றை ஸ்தாபித்து புதுப்பிக்கத்தக்க சக்த வளங்களை விரிவுப்படுத்துவது அவசியம் என தெரிவு குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.அதற்கு தேவையான சட்டத்தை திருத்தை செய்ய எதிர்பார்ப்பதாகவும் இதன்போது குறிப்பிடப்பட்டது.

இந்திய கடனுதவி திட்டம் மற்றும் உலக வங்கியின் கடன் திட்டத்தின் கீழ் எரிவாயு விநியோக பிரச்சினைக்கு தீர்வு காண அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.எதிர்வரும் நாட்களில் எரிவாயு விநியோகம் வழமைக்கும் திரும்பும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!