நிதி அமைச்சு பதவியை வகிப்பது எனக்கு இலகுவானது! அமைச்சர் அலி சப்ரி

நிதியமைச்சர் பதவியை வகிப்பது எனக்கு இலகுவானதாக இருக்கின்றது என நிதி மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மக்களுக்காக அப்பதவியிலிருந்து பணி செய்ய முடியும் என நம்புகிறேன். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எனக்கு இந்த பதவியை வழங்கியது அப்பதவியை வகிக்க யாரும் முன்வராத வேளையிலாகும்.

இது மக்களுக்கு சேவையாற்ற எனக்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பமாக நான் கருதுகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

இலங்கையில் தற்போது முதலிடம் பெறுவது பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதாகும். முதலில் அரசியல் ஸ்திரமற்றத்தன்மைக்கு தீர்வு காண தேவையாக அனைத்துக்கும் முன்னால் நாட்டை முன்னிறுத்தி செயல்பட வேண்டும்.

இரண்டாவதாக சிறப்பான பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்த வேண்டும். நேரடி வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் வங்கி முறைகளோடு இலங்கைக்கு வரும் அந்நிய செலாவணியுடன் உல்லாசப் பயணத்துறையை மீண்டும் மேம்படுத்த வேண்டும். எமது அண்மைக்கால பண இருப்பு குறித்து முதன்மையான கவனம் செலுத்தப்பட்டது.

அது சீரான நிலைமையை அடைந்தவுடன் அபிவிருத்தி குறித்து கவனம் செலுத்தலாம். அது எமது பொருளாதாரத்தை சரியான வழியில் இட்டுச் செல்லும்.

எமது விநியோக முறைமையை பழைய நிலைமைக்கு கொண்டு வர வேண்டும். ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். அது தற்போது நடைபெற்று வருகின்றது. இதன் மூலம் கடன் செலுத்துகையில் நாட்டுக்கு மீண்டும் கௌரவமான இடம் கிடைக்கும்.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் தர நிர்ணய நிறுவனங்களின் எதிர்மறையான தரப்படுத்தலில் இருந்து மீள முடியும்.

அதைத்தவிர கடன் மீள செலுத்தல் கட்டமைப்பை மீளமைக்கவும் மற்றும் பாதுகாப்பான நிதியுதவி நடவடிக்கைகளில் ஈடுபடவும் இறையான்மை கடன்முறி வைத்திருப்போருடன் கலந்துரையாடி வருகின்றோம் என தெரிவித்துள்ளார்.  

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!