நாமல் ராஜபக்சவின் மீது நிதி மோசடி குற்றச்சாட்டுகள்! வெளிக்கொணர்ந்த ஜேவிபி

நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைகளை நிர்மாணிப்பதற்காக முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச, நிமல் பெரேரா ஊடாக NR Projects என்ற நெதர்லாந்து நிறுவனம் மற்றும் Aspen Medical  என்ற அவுஸ்திரேலிய நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்றுள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

கிரிஷ் உடன்படிக்கை தொடர்பில் தாங்கள் செய்த முறைப்பாடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த மோசடி தெரியவந்துள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கிரிஷ் உடன்படிக்கை தொடர்பான வழக்கின் பி அறிக்கையின் அடிப்படையில் நாமல் ராஜபக்ச, தாம் 60 மில்லியன் ரூபாவை பெற்றதை ஒப்புக்கொண்டதாக வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்
அதனை ரக்பி போட்டிக்கு நன்கொடையாக வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ரக்பி சம்மேளனம் அவரிடமிருந்து அத்தகைய நன்கொடையைப் பெறவில்லை என்று கூறியுள்ளதாக வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்தின்  NR Projects  என்ற நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட 82 மில்லியன் யூரோ பெறுமதியான நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைகளின் நிர்மாணத் திட்டங்களில் மோசடி மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பான மேலதிக தகவல்கள் தெரியவந்துள்ளதாக சமரசிங்க தெரிவித்தார்.

நிமல் பெரேராவின் சிங்கப்பூரில் உள்ள கணக்கில் நெதர்லாந்தின் NR Projects நிறுவனமும் அவுஸ்திரேலியாவின் Aspen Medical நிறுவனமும் பணத்தை வைப்பிலிட்டு அதில் இருந்து நாமல் ராஜபக்சவின் கணக்கிற்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி நெதர்லாந்து நிறுவனம் 4.33 மில்லியன யூரோக்களையும்; அவுஸ்திரேலிய நிறுவனம் 555,000 அமெரிக்க டொலர்களை நிமல் பெரேராவின் சிங்கப்பூர் கணக்கில் வைப்பு செய்ததாகவும் அவர் கூறினார்
எனினும் Aspen Medical நிறுவனம் இலங்கையில் எந்த திட்டப்பணிகளையும் மேற்கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது என்றும் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள நாமல் ராஜபக்ச, தாமும், தமது குடும்பத்தினரும் குறித்த இரண்டு நிறுவனங்களுடன் எந்த பண பரிவர்த்தனையிலும் ஈடுபடவில்லை என்றும்,இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குக்காக தாம் இன்னும் நீதிமன்றம் சென்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!