உணவின்றி மக்கள் இறந்து போகும் நிலை உருவாகலாம்:மகிந்த அமரவீர

இன்னும் மூன்று மாதங்கள் கடந்த பின்னர் நாட்டு மக்களின் பலர் இறந்து போவார்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உப தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள போட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போது எதிர்நோக்கியுள்ள நிலைமை சம்பந்தமாக பல சந்தர்ப்பங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எச்சரிக்கை விடுத்திருந்தது. அந்த எச்சரிக்கையை எவரும் கவனத்தில் கொள்ளாது, எமது கட்சியை அவமதிக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிலர் நடந்து கொண்டனர்.

எதிர்வரும் காலங்களில் எரிபொருள் கிடைக்காமல் போகலாம் சமையல் எரிவாயு கிடைக்காமல் போகலாம். மின் கட்டணத்தை பெருமளவில் அதிகரிக்க வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மின் கட்டணம் அதிகரிக்கும் போது குடி நீர் கட்டணமும் அதிகரிக்கும். மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பை பற்றி பேசுகின்றனர். எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிப்பது பற்றியும் பேசுகின்றனர்.

இவ்வாறு அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்து மக்கள் சாப்பிட உணவின்றி இறந்து போகலாம். உணவு மற்றும் அத்தியவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு எதிர்காலத்தில் பலர் இறந்து போகக்கூடும்.

ராஜபக்ச அரசாங்கம் கொள்வனவு நடவடிக்கைகளுக்குப் புறம்பாக ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. அந்த சந்தர்ப்பத்தில் அவற்றுக்கு எதிராக குரல் கொடுத்து இருந்தால், ஒரு வேளை நான் உயிருடன் இருந்து இருக்க வாய்ப்பிருக்காது.

அதேவேளை ,சர்வக்கட்சி நிர்வாகம் ஒன்றை உருவாக்குவதே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு ஒரே தீர்வு.

நாட்டின் உள்நாட்டு நெருக்கடிக்கு தீர்வுகாண சர்வக் கட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைக்க மக்கள் விடுதலை முன்னி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கைக்கோர்க்கவில்லை என்றால், எமது கட்சியும் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்துடன் எந்த இணக்கப்பாட்டுக்கும் வராது எனவும் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.  

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!