90 வயது மூதாட்டியை உயிரோடு எரித்துக்கொன்ற பேத்திகள்!

நெல்லை அருகே பேட்டை ஆதம்நகர் எதிரே கடந்த 3-ந் தேதி பெண் எரித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அந்த பெண் கொலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது.

அதாவது, கொலை செய்யப்பட்டு கிடந்தவர் பழைய பேட்டை கண்டியபேரியை சேர்ந்த சுப்பம்மாள் (வயது 90) என்பதும், அவரை பேத்திகள் 2 பேர் சேர்ந்து கொலை செய்துள்ளனர் என்ற திடுக்கிடும் தகவலும் வெளியானது.
   
அதுபற்றி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:-
சுப்பம்மாள் மகள் வழி பேத்திகள் பேட்டை செக்கடியை சேர்ந்த லட்சுமணன் மனைவி மேரி (38), கிருஷ்ணபேரியைச் சேர்ந்த பொன்அழகு மனைவி மாரியம்மாள் (40). இதில் மேரி தனது பாட்டி சுப்பம்மாளை சில ஆண்டுகளாக பராமரித்து வந்தார். ஆனால், அவரால் தொடர்ந்து பராமரிக்க முடியாததால், தனது சகோதரியான மாரியம்மாள் வீட்டில் கொண்டு போய் விட்டார். ஆனால், அவரும் பராமரிக்க சிரமப்பட்டு வந்தார்.

இதையடுத்து 2 பேரும் சேர்ந்து சுப்பம்மாளை கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி, கடந்த 3-ந் தேதி ஒரு ஆட்டோவில் சுப்பம்மாளை அழைத்துக் கொண்டு மேரி, மாரியம்மாள் இருவரும் ஆதம்நகர் பகுதிக்கு சென்றனர். பின்னர் ஆட்டோவை அங்கு இருந்து அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சுப்பம்மாளை அழைத்துக் கொண்டு அங்குள்ள ஒதுக்குப்புறமான பகுதிக்கு சென்றனர். பின்னர் 2 பேரும் சேர்ந்து மறைத்து வைத்து இருந்த பெட்ரோலை எடுத்து சுப்பம்மாள் மீது ஊற்றி உயிரோடு தீவைத்து எரித்துக் கொலை செய்தாக கூறப்படுகிறது.

பின்னர் மாரியம்மாள் தான் வந்த ஆட்டோவை மீண்டும் வரவழைத்து அதில் ஏறி வீட்டிற்கு சென்றார். மேரி நடந்தே தனது வீட்டிற்கு சென்றது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொடூரக்கொலை தொடர்பாக மாரியம்மாள், மேரியை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!