வங்கக்கடலில் நாளை புயல் உருவாகிறது!

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நேற்று காலை ஓர் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இது நாளை புயலாக மேலும் வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 10ஆம் தேதி ஆந்திரா -ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக்கூடும்.
    
இன்று மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் ,கிருஷ்ணகிரி ,தர்மபுரி ,சேலம், நாமக்கல் ,கரூர் ,திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10-ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் ,டெல்டா மாவட்டங்கள் ,அதனை ஒட்டிய மாவட்டங்கள் ,கன்னியாகுமரி ,திருநெல்வேலி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

அத்துடன் அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!