ரஷ்ய துருப்புகளின் மற்றுமொரு கொடூர செயல்: 60 பேர் பலி!

உக்ரைனில் பொதுமக்கள் பதுங்கியிருந்த பாடசாலை ஒன்றில் ரஷ்ய துருப்புகள் வெடிகுண்டு வீசிய சம்பவத்தில் குறைந்தபட்சம் 60 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு உக்ரைனில் உள்ள Bilohorivka பகுதி பள்ளி ஒன்றில் ரஷ்ய துருப்புகள் முன்னெடுத்த வெடிகுண்டு தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியானது.
    
குறித்த பள்ளியில், கிட்டத்தட்ட முழு கிராமமும் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சுமார் 30 பேர் குறித்த பள்ளியில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். ஆனால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி சுமார் 60 பேர் மரணமடைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சுமார் 4 மணி நேரம் அந்த கட்டிடமானது தீப்பற்றி எரிந்ததாகவும், பின்னர் இடிபாடுகளில் சிக்கியிருந்த நபர்களை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய துருப்புகளின் இந்த கொடூர தாக்குதலுக்கு பிரித்தானிய வெளிவிவகார செயலர் Liz Truss கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பள்ளி மீது ரஷ்யாவின் சமீபத்திய தாக்குதல் திகிலடைய வைத்துள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், ரஷ்ய குண்டுவீச்சிலிருந்து தஞ்சமடைந்த அப்பாவி மக்களின் மரணம் கண்டனத்துக்குரியது என்றார்.

கடந்த மாதம் ரயில் நிலையம் ஒன்றின் மீது ரஷ்ய துருப்புகள் முன்னெடுத்த தாக்குதலில், 5 சிறார்கள் கொல்லப்பட்டனர். உக்ரைன் பள்ளி மீது தாக்குதலானது, ரஷ்ய போர் வெற்றி தினத்தை கொண்டாடும் வேளையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, ஏற்கனவே இதுபோன்ற தாக்குதல் ரஷ்ய தரப்பில் முன்னெடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றுள்ளதுடன், உக்ரைனின் உள்கட்டமைப்புகளை மொத்தமாக அழித்துள்ளது மற்றும் 5 மில்லியன் உக்ரேனியர்களை வெளிநாடுகளில் அகதிகளாக வெளியேற வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!