கார் ஓட்டுனரை நம்பி சென்ற தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்!

சென்னையில் தொழிலதிபர் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவர்களது உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மயிலாப்பூர் பிருந்தாவன் நகர் துவாரகா காலனியில் வசித்து வந்த தொழிலதிபர் ஸ்ரீகாந்த்(65). தனது மகளுக்கு திருமணமாகி அமெரிக்காவில் இருக்கும் நிலையில், மனைவி அனுராதாவுடன் (55) சென்னையிலேயே வசித்து வந்தார்.
    
கடந்த மார்ச் மாதம் கர்ப்பிணியாக இருந்த தங்களது மகள் சுனந்தாவை காண ஸ்ரீகாந்த்-அனுராதா இருவரும் அமெரிக்கா சென்றுள்ளனர். அங்கே சுனந்தாவிற்கு குழந்தை பிறந்ததால் அமெரிக்காவிலேயே 3 மாதங்கள் தங்கி இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் சென்னைக்கு திரும்பியபோது, அவர்களது கார் ஓட்டுநர் கிருஷ்ணா விமான நிலையத்தில் இருந்து மயிலாப்பூரில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு கிருஷ்ணா தனது நண்பர் ரவி என்பவருடன் சேர்ந்து ஸ்ரீகாந்த் – அனுராதா தம்பதியை திடீரென தாக்கி கொலை செய்துள்ளார்.

கிருஷ்ணா தான் ஸ்ரீகாந்த் வீட்டு பராமரிப்புகளை செய்து வந்திருக்கிறார், தம்பதி அமெரிக்காவுக்கு சென்ற போது அவர் தான் வீட்டை கவனித்து வந்தார்.

பின்னர் ஏற்கனவே மூட்டை கட்டி வைத்திருந்த நகைகளை எடுத்துக் கொண்டு, தம்பதியின் உடல்களை காரில் கொண்டு சென்றார். நெமிலிச்சேரியில் உள்ள ஸ்ரீகாந்துக்கு சொந்தமான பண்ணை வீட்டுக்கு சென்று, தன் நண்பரின் உதவியுடன் அங்கேயே இருவரின் உடல்களையும் புதைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து துப்பு துலக்கிய பொலிசார், கொலையாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து கிருஷ்ணா, ரவி ஆகிய இருவரும் ஆந்திர மாநிலம் ஓங்கோவில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

அதன் பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஸ்ரீகாந்த், அனுராதா தம்பதியின் உடல்கள் பண்ணை வீட்டில் புதைக்கப்பட்டது தெரிய வந்தது. உடனே அங்கு விரைந்த பொலிசார், இருவரின் உடல்களையும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டது. மேலும் அமெரிக்காவில் உள்ள அவர்களது மகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!