திசை மாறும் அசானி புயல்: கனமழைக்கு வாய்ப்பு!

வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள அசானி புயல், கரையை கடக்காமல் மீண்டும் கடலை நோக்கி திரும்பும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், அரியலூர்,பெரம்பலூர், திருச்சி, நாமக்கல்,புதுக்கோட்டையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
    
வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள அசானி புயல், ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை கடக்காமல் மீண்டும் கடலை நோக்கி திரும்பும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை வட ஆந்திரா – ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கள்ளக்குறிச்சி, கரூர் ,சேலம், தர்மபுரி, ஈரோடு ,கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என்றும் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ,திருப்பூர் ,தேனி,மதுரை, சிவகங்கை, விருதுநகரில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதனிடையே சென்னையில் ஆர்.ஏ.புரம், எம்ஆர்சி நகர் ,பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மந்தவெளி, மயிலாப்பூர், அடையாறு, திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது. திருவொற்றியூர், புதுவண்ணாரப்பேட்டை, எண்ணூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!