கோட்டாபயவிடம் சுமந்திரன் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்

“புதிய பிரதமரை உடனடியாக நியமித்துவிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து விலக வேண்டும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டின் நெருக்கடி நிலைமைக்கு ஜனாதிபதியும் பிரதமருமே முழுப்பொறுப்பு. அதனால்தான் இருவரையும் பதவி விலகக் கோரி மக்கள் ஒரு மாதத்துக்கு மேலாகப் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச விலகியுள்ளார். இதையடுத்து முழு அதிகாரங்களும் ஜனாதிபதியின் கைகளுக்குச் சென்றுவிட்டன.

இது நிலைமையை மேலும் மோசமாக்கும். இதனிடையே மக்களின் எதிர்ப்புப் போராட்டங்களும், வன்முறைச் சம்பவங்களும் தீவிரமடைந்துள்ளன.

எனவே, புதிய பிரதமரை உடனடியாக நியமித்துவிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் பதவியிலிருந்து விலக வேண்டும். அப்போதுதான் நெருக்கடி நிலைமைக்குத் தீர்வு கிடைக்கும்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!