அசானி புயல் எதிரொலி: சென்னையில் உள்நாட்டு விமானங்கள் ரத்து!

அசானி புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 2வது நாளாக இன்றும் 17 உள்நாட்டு விமானங்கள் ரத்தாகியுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 8ம் தேதி புயலாக வலுவானது .

இதற்கு அசானி என்று பெயரிடப்பட்ட நிலையில், வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கடந்த 6 மணி நேரத்தில் வடக்கு – வடமேற்கு திசையை நோக்கி பயணித்தது. இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்று வீசியதுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆந்திராவின் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் மொத்தம் 207 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    
இதனிடையே வங்க கடலில் தீவிர புயலாக நிலை கொண்டிருந்த அசானி, புயலாக வலுவிழந்தது. ஆந்திராவின் மச்சிலிப்பட்டினத்திலிருந்து சுமார் 60 கிமீ தென்-தென்கிழக்கே காக்கிநாடாவிலிருந்து 180 கிமீ தென்-தென்மேற்கே தீவிர புயலாக இருந்த அசானி வலுவிழந்த புயலாக நிலவுகிறது.

இந்நிலையில் அசானி புயல் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விசாகப்பட்டினம், விஜயவாடா, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, ஜெய்ப்பூர், ராஜமுந்திரி விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து அந்தமான் புறப்படும் விமானங்கள் காலதாமதமாகியுள்ளது.

பெங்களூா், ஜெய்ப்பூர், கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கான 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று முதல் மழை பெய்து வரும் நிலையில், வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!