அமைச்சர்கள் ஊழல் செய்திருந்தால் லோக் ஆயுக்தாவில் புகார் செய்து நிரூபியுங்கள்- தம்பிதுரை சவால்

தமிழக அமைச்சர்கள் ஊழல் செய்திருந்தால் அதை நிரூபிக்க பாரதீய ஜனதா லோக் ஆயுக்தாவில் புகார் செய்து நிரூபிக்கவேண்டும் என்று அ.தி.மு.கவின் பாராளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் கரூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

‘ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே தேர்தல் என்ற மத்திய அரசின் கொள்கை ஏற்புடையது அல்ல. தமிழக கலாச்சாரத்திற்கு இந்த கொள்கை ஒத்துவராது. மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போதே எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழகத்தில் ஐந்து இடங்கள் தெரி செய்யப்பட்டு, அதன் விபரம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

ஆனால் மத்திய அரசுதான் பல்வேறு காரணங்களால் இத்திட்டத்தை கொண்டு வராமல் காலம் தாழ்த்தி இருக்கிறது. தற்போது மதுரையில் எய்ம்ஸ் வைத்தியசலையை அமைக்க உள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி எங்கள் நண்பர். ஆனால் பா.ஜ.க. தலைவர்கள் எங்கள் ஆட்சியை பற்றி குறை சொன்னால் ஏற்றுக் கொள்ளமாட்டோம். தமிழகத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி வருவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அதனை தடுக்க ஏதேனும் இதுவரை முயற்சி செய்துள்ளாரா? இவை அனைத்தும் அ.தி.மு.க. அரசை குறை கூறும் நோக்கில் கூறப்படும் பொய் குற்றச்சாட்டுகள். ஆதாரம் இருந்தால் பொன். ராதாகிருஷ்ணன் நிரூபிக்கட்டும்.

சென்னை வந்திருந்த பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா தமிழகத்தில் ஊழல் மலிந்து இருப்பதாக கூறியுள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்போம் என்று கூறிய பா.ஜ.க. இதுவரை எத்தனை ஊழல் குற்றச்சாட்டுகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மேல்முறையீடு செய்ய பா.ஜ.க. அரசு மெத்தனமாக செயல்படுகிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் நடந்த ஊழல்களில் எதற்கான தீர்வை பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ளது.

தமிழக அமைச்சர்கள் ஊழல் செய்ததற்கான ஆதாரங்கள் இருந்தால் அதை நிரூபிக்க வேண்டும். லோக் ஆயுக்தாவில் பா.ஜ.க.வினர் புகார் தெரிவிக்கலாம். எதையும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.’ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!