கோட்டாவை ரணிலும், ரணிலை கோட்டாவும் நம்புகின்றனர்! மக்கள் இருவரையும் நம்பவில்லை!

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானம், பொதுமக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்காமல் எடுக்கப்பட்ட தீர்மானம் என்று ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அனைத்து குடிமக்களும் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று ஒருமனதாக அழைப்பு விடுத்து வருகின்றனர்.

அவர்கள் அனைவரும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், கொள்ளையடிக்கப்பட்ட பொது நிதியை மீட்டெடுக்கவும், அந்த செயல்களுக்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் அழைப்பு விடுக்கின்றனர்.

இந்தநிலையில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டமையானது, நியாயமற்றது மற்றும் ஜனநாயக மதிப்பில்லாத செயற்பாடு என்று அனுரகுமார இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது குறிப்பிட்டார்

ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் பதவியை வகித்து, அரசாங்கங்களை அமைத்து, கடந்த பொதுத் தேர்தலில் ஒரு ஆசனத்தைக் கூட வெல்ல முடியாத ஒருவராக மாறினார்.

நாடாளுமன்றத்தில் நுழைவதற்கு தேவையான வாக்குகள் கூட அவரிடம் இல்லை.

மக்களின் சம்மதத்தை தெரிந்துக்கொள்ளவே தேர்தல் நடத்தப்படுகிறது என்றால், அவருக்கு மக்கள் ஆணை இல்லை என்பதையே தேர்தல் முடிவு காட்டியது.

இந்தநிலையில் பொது மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவும்,நிராகரிக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷவும் இணைந்து நாட்டை ஆட்சி செய்வது ஜனநாயகத்தின் அனைத்து அடிப்படைகளுக்கு எதிரானது என்று அனுரகுமார தெரிவித்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!