ஜனாதிபதிக்கு சஜித் மீண்டும் கடிதம்!

மக்களின் ஆணைக்கு முரணான விதத்தில் நியமிப்பதற்குத் திட்டமிடுகின்ற அமைச்சரவையில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எவரும் அங்கம்வகிக்க மாட்டார்கள் என்றும், தனது நிபந்தனைக்கு அமைவாக ஸ்தாபிக்கப்படும் அரசாங்கத்தில் பிரதமராகப் பதவி வகித்து மக்களுக்கு சேவையாற்றத் தயார் என்றும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அறிவித்திருக்கின்றார்.

    
தனது நான்கு நிபந்தனைகளுக்கு இணக்கம் தெரிவிக்கும் பட்சத்தில் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருப்பதாகக்கூறி நேற்றுமுன்தினம் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார்.
அக்கடிதத்திற்குப் பதிலளித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில், ரணில் விக்ரமசிங்கவைப் பிரதமராக நியமிக்கும் தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எவரேனும் புதிய அமைச்சரவையில் அங்கம்வகிக்க விரும்பினால் அதனைத் தனக்கு அறியத்தருமாறும் குறிப்பிட்டிருந்தார்.
மீண்டும் அதற்குப் பதிலளித்து அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அக்கடிதத்தில் அவர் :
பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு நீங்கள் எனக்கு அழைப்பு விடுத்தபோது, அந்தப் பதவியை ஏற்றுக்கொள்வதில் எனக்கு விருப்பமில்லை என்று நான் கூறவில்லை என்பதையும் ஐக்கிய மக்கள் சக்தியுடனும் ஐக்கிய மக்கள் கூட்டணியுடனும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இதுகுறித்து முடிவொன்றைக் கூறுவதாகவுமே தெரிவித்தேன் என்பதையும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

சில நிபந்தனைகளின் கீழ் நான் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்றுக் கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் உறுப்பினர்கள் இணங்கியதன் காரணமாகவும், அந்த நிபந்தனைகளின்கீழ் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்றுக்கொள்வதற்கு நான் விருப்பத்துடன் இருந்ததன் காரணமாகவும் எனது பிரதிநிதிகள் உங்களைச் சந்தித்து இதுகுறித்துத் தெளிவுபடுத்தினார்கள்.

அதன்பின்னர் கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படாததுடன் உங்களது பிரதிநிதிகளுக்கும் எனது பிரதிநிதிகளுக்கும் இடையில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச்செல்வதற்கு இணக்கம் காணப்பட்டது.

அதன்படி இருதரப்புக்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதுடன் எனது பிரதிநிதிகள் சில நிபந்தனைகளை உங்களது பிரதிநிதிகளுக்கு அனுப்பிவைத்தார்கள்.

எனவே பிரதமர் பதவியைப் பொறுப்பேற்றுக் கொள்வதற்குத் தயாராக இருப்பதாக இம்மாதம் 12 ஆம் திகதியே நான் முதற்தடவையாக அறிவித்தேன் என்று நீங்கள் கூறியிருப்பது முற்றிலும் தவறான விடயமாகும்.

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லதொழித்தல், அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துதல் உள்ளடங்கலாக சில நிபந்தனைகளின் கீழ் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருப்பதாக நான் உறுதியாக அறிவித்திருந்தேன்.


என்னை பிரதமராக நியமித்ததன் பின்னர் நீங்கள் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகவேண்டும் என்பதும் எனது நிபந்தனைகளில் உள்ளக்கப்பட்டிருந்தது.

நீங்கள் பதவி விலகவேண்டுமென வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் எழுச்சியடைந்துள்ள மக்களின் நிலைப்பாடும், அவர்களது அபிப்பிராயத்திற்கு முரணான வகையில் குறிப்பிட்ட காலவரையறையின்றி பதவியில் தொடர்ந்து இருப்பதற்கு மாற்றுவழிகளைக் கையாள்வது மக்கள் ஆணைக்கு முரணானது என்பதுமே உங்களைப் பதவி விலகுமாறு நான் கோரியதற்கான பிரதான காரணங்களாகும்.

முன்னர் கூறிய நிபந்தனைகளும் உங்களுடைய பதவி விலகலும் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நடைபெறவேண்டும் என்று 12 ஆம் திகதி அனுப்பிவைத்திருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
மக்களின் ஆணைக்கு முரணான விதத்தில் நீங்கள் தற்போது நியமிப்பதற்குத் திட்டமிடுகின்ற அமைச்சரவைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் எந்தவொரு உறுப்பினர்களையும் பரிந்துரைக்கவில்லை என்பதை அறியத்தருகின்றேன்.

எதுஎவ்வாறெனினும் நான் கடந்த 12 ஆம் திகதி அனுப்பிவைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின்கீழ் என்னால் ஸ்தாபிக்கப்படுகின்ற அரசாங்கத்தின் பிரதமராக மக்களுக்கு சேவையாற்றுவதற்குத் தயாராக இருக்கின்றேன் என்று அவர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!