ரணில்: டை கோட் அணிந்த பஷில்!

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கி புதிய அரசாங்கத்தை உருவாக்கியுள்ள போதிலும், இவர்களால் தற்போதைய நெருக்கடிக்கு ஸ்திரமான தீர்வை பெற்றுக்கொடுக்க முடியுமென்ற முட்டாள் தனமான நம்பிக்கை எமக்கு இல்லை. எனினும் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு அரசாங்கத்தின் நல்ல வேலைத்திட்டங்களை ஆதரிப்போம் என அரசாங்கத்தில் இருந்து வெளியேறி சுயாதீன எதிரணியாக செயற்படும் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
    
பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர், கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தமது நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினர். இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கூறுகையில்,
சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்து அதனுடன் இணைந்து தேசிய சபையை உருவாக்கி சகல கட்சிகளினதும் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும்,

அதேபோல் தேசிய சபையின் ஒத்துழைப்புடன் பிரதமர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக இருந்தது. ஆனால் தற்போது ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கி புதிய அரசாங்கத்தை உருவாக்கியுள்ளனர். ரணிலை பிரதமராக்கினால் தற்போதைய நெருக்கடிக்கு ஸ்திரமான தீர்வு கிடைக்கும் என்ற முட்டாள் தனமான நம்பிக்கை எமக்கு இல்லை. இன்றைய நெருக்கடிக்கு அவரும் காரணக்கர்த்தா என்பதை மறுக்க முடியாது என்றார்.

அவரது நான்கு ஆண்டு ஆட்சியில் தான் நாடு நாசமாகியது. அதிக கடன் பெற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் இவற்றை கூறிவிட்டு தற்போதைய அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளும் நோக்கம் எமக்கில்லை. இவர்கள் முன்னெடுக்கும் ஆரோக்கியமான வேலைத்திட்டங்களில் எமது ஒத்துழைப்புகள் வழங்கப்படும். நாம் சுயாதீன எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு அரசாங்கத்தின் நல்ல வேலைத்திட்டங்களை ஆதரிப்போம்.

ஆனால் மக்களின் நெருக்கடி நிலைமையை சாட்டாக வைத்துக்கொண்டு சர்வதேசத்திற்கு நாட்டை விற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றால் அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பசில் ராஜபக்‌ஷ செய்ய முற்பட்டதை செய்ய முயற்சிக்கக்கூடாது. ஆனால், பஷில் ராஜபக்‌ஷ என்பவர் சால்வை போட்ட ரணில், அதேபோல் ரணில் என்பவர் டை கோட் அணிந்த பஷில் என்பதே எனது நிலைப்பாடு என்றார்.

செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த உதய கம்மன்பில எம்.பி கூறுகையில் :- நாட்டுக்கு அரசாங்கம் அவசியம், ஆகவே இந்த அரசாங்கத்தை வீழ்த்த நாம் முயற்சிக்க மாட்டோம் . ஆனால் இவர்களால் நாட்டை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கில்லை. ரணிலின் கடந்தகால அரசியல் வரலாறு என்ன என்பது எமக்கு நண்பராக தெரியும் என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!