ரணிலை பாதுகாக்க 10 கோடி ரூபாவுக்கு பேரம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷர்களின் தேவைக்காக செயற்பாடுவாரே தவிர மக்களின் தேவைக்காக ஒருபோதும் செயற்படமாட்டார்.

பிரதமரை இளைஞர்கள் ரணில் ராஜபக்ஷ என அழைப்பது தவறொன்றுமில்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எவரும் விலைபோகமாட்டார்கள் என்பதை பிரதமரும், ஜனாதிபதியும் தெரிந்துகொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
    
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ராஜபக்ஷர்கள் தங்களின் அரசாங்கத்தை முன்கொண்டு செல்ல முடியாத காரணத்தினால் தற்போது அதற்கு ஒரு இணைப்பு சக்தியை பொருத்தியுள்ளார்கள்.

நாட்டு மக்கள் ராஜபக்ஷர்களை முழுமையாக புறக்கணிக்கிறார்கள்.கோட்டபய ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படுவது மக்களுக்கு இழைக்கும் பாரிய துரோகமாகும். மக்களாணைக்கு முரணாக செயற்படும் தரப்பினருக்கு வரலாற்றில் இடம் கிடைக்காது.

மக்களுக்கு முரணாக முன்னெடுக்கும் தீர்மானங்கள் நெடுகாலத்திற்கு நீடிக்காது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்பில் கோட்டபய ராஜபக்ஷ கடிதம் ஊடாக எமக்கு ஆலோசனை வழங்க வேண்டிய தேவை கிடையாது.

நாட்டு மக்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை முழுமையாக புறக்கணித்துள்ளார்கள். ரணில் விக்ரசிங்கவுடன் ஒன்றிணைந்து செயற்பட முடியாது என்பதற்காகவே ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கினோம். அதற்கு நாட்டு மக்கள் முழுமையான ஆதரவு வழங்கினார்கள்.

முறையற்ற வகையில் அரசாங்கத்தை ஸ்தாபித்து முன்னெடுத்து செல்ல முடியாது.ஜனாதிபதிக்கு அரசியல் தெரியாத காரணத்தினால் அவருக்கு நிலையான அரசாங்கம் தொடர்பில் விளக்கம் போதாது.

ராஜபக்ஷர்களை பாதுகாப்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை போன்றவர்களை இணைத்து முறையற்ற அரசாங்கத்தை அமைக்கவே ஜனாதிபதிக்கு தெரியும். அரசாங்கத்திற்கு மக்களாணை ஒருபோதும் கிடையாது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஷர்களுக்கு சார்பாகவே செயற்படுவார். ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஒரு உறுப்பினருக்கு 10 கோடி ரூபா வழங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியினர் இவ்வாறான முறையில் விலைபோவதில்லை என்பதை பிரதமரும்,ஜனாதிபதியும் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!