நெல்லை கல் குவாரி விபத்து: பலி எண்ணிக்கை இரண்டாக உயர்வு!

நெல்லை கல் குவாரி விபத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக முன்னிர்பள்ளம் அருகே அடைமிதிப்பான் குளத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் கடந்த சனிக்கிழமை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு விபத்து. மேலே இருந்த பாறைகள் உடைந்து அப்படியே குவாரி உள்ளே விழுந்துள்ளது. மழை பெய்ததால், அங்கு பணியாற்றி வந்த பெரும்பாலான ஊழியர்கள் மேலே வந்து இருந்தனர், ஆனால் 6 ஊழியர்கள் மட்டும் கீழே இருந்த வாகனங்களிலேயே தங்கி இருந்தனர்.

    
இரவு நேரத்தில் எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் இவர்கள் கீழேயே சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தைக் கண்டதும் மேலே இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
அவர்களுடன் அரக்கோணத்தில் இருந்து வந்த லெப்டினன்ட் கமாண்டர் சுதாகர் தலைமையிலான தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் மீட்புப் பணிகளில் இறங்கினர். நேற்று மதியம் வரை முருகன், விஜய் என 2 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். அதேபோல மீட்கப்பட்ட மற்றொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4ஆவது நபர் சடலமாக மீட்கப்பட்டார். பெரும் போராட்டத்திற்குப் பின்னர், லாரி கிளீனர் முருகனின் உடலைத் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்டனர்.

முருகன், நாங்குநேரி அருகே உள்ள ஆயர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவரின் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

கல்குவாரி விபத்தில் இதுவரை 2 பேர் உயிருடனும் 2 பேர் சடலமாகவும் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள ராஜேந்திரன் மற்றும் செல்வகுமார் என இரண்டு லாரி ஓட்டுநர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!