இளையோர் மத்தியில் அதிகரித்து வரும் குடிப்பழக்கம்: – பிரதமர் மோடி வேதனை

இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகரித்து வரும் குடிப்பழக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கடும் வேதனை தெரிவித்துள்ளார்.உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் சமூக-மத அமைப்பான ‘உமையா சனஸ்தான்’ சார்பில் ‘மா உமையா தம்’ என்ற ஆசிரமம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆசிரமத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். பின்னர் அங்கு குழுமியிருந்தவர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.

அப்போது அவர், பல்வேறு சமூக பிரச்சினைகளை எதிர்த்து போராடி வரும் உமையா சனஸ்தான் அமைப்பினர், மதுவுக்கு எதிராகவும் போராடுமாறு அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ஒரு பிரதமராக அல்ல, உங்கள் மத்தியில் வளர்ந்தவன் என்ற முறையில் இந்த கவலையை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன். நமது மூதாதையர்கள் வெறுத்த குடிப்பழக்கத்துக்கு இன்றைய இளைய தலைமுறையினர் குறிப்பாக நமது இளைஞர்கள் அடிமையாகி இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த போக்கை நாம் வளரவிட்டால், 20 அல்லது 25 ஆண்டுகளில் நமது சமூகம் அழிந்து விடும்.

நமது இளைய தலைமுறையினர் இத்தகைய தவறான வழியில் செல்வதை நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன். கடந்த காலங்களில் பல்வேறு சமூக பிரச்சினைகளில் நீங்கள் ஆற்றிய பங்களிப்பை போல இதிலும் உங்களால் முக்கிய பங்காற்ற முடியும்.

இந்த ஆசிரமத்துக்கு வரும் பக்தர்களிடம், ‘உங்கள் வீட்டில் கழிவறை உண்டா? இல்லையா?’ என கேட்கப்பட வேண்டும். அத்துடன் அவர்களுக்கு மரக்கன்று ஒன்றையும் வழங்க வேண்டும். இதன் மூலம் மா உமையா மீதான பக்தி வளர்வது போல, அந்த மரமும் வளரும். இது, திறந்த வெளியில் மலம் கழித்தலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சுற்றுச்சூழலை தூய்மையாகவும், பசுமையாகவும் வைத்திருக்க உதவும்.

‘உமையா சனஸ்தான்’ மூலம் திறக்கப்பட்ட தர்மசாலாக்கள், ஒட்டுமொத்த வட இந்தியாவிலும் சுற்றுலாவை மேம்படுத்தி வருகின்றன. குறிப்பாக உத்தரகாண்டில் ஹரித்வார், ரிஷிகேஷ், பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி போன்ற தலங்களுக்கான புனித யாத்திரைகள் நடைபெறுகின்றன. ஹரித்வாரில் மிகப்பெரிய தர்மசாலா உருவாக்கியதற்காக சனஸ்தான் அமைப்பை வாழ்த்துகிறேன்.

Tags: ,