இலங்கையில் ‘தினமென்’ சதுக்கமும், ஐ. நா.வில் வீட்டோவும்

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இங்கு தனி கட்டுரை எழுத விரும்பாத காரணத்தினால், யதார்த்தத்தைக் கருத்தில் கொண்டு, எனது கணிப்பை இங்கு சுருக்கமாகக் கொடுக்க விரும்புகிறேன்.

அங்கு நிலைமையைக் கணிக்க முடியாதவாறு, ஒவ்வொரு மணி நேரமும் நிலைமை மாறிக்கொண்டே இருக்கிறது. இதேவேளை ராஜபக்சக்கள் தம்மை காப்பாற்றுவதற்கான சகல முன்னேற்பாடுகளையும் நாளுக்கு நாள் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்பொழுது, பிரதமர் மகிந்த ராஜபக்ச இராஜினாமா செய்திருந்தாலும், ராஜபக்ச குடும்பத்தின் ஆணிவேரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியில் உள்ளார். அத்துடன் நரியான ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை தீவின் தனிப்பெரும் ஜனநாயகவாதியும், ஐக்கிய இலங்கை வாதியுமான சுமந்திரனின் அண்மைக்கால செவ்விக்கு அமைய, தமிழர் கூட்டமைப்பு ரணிலின் நியமனத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளார்கள் போல் தெரிகிறது.

இது தமிழீழ மக்களிற்குக் கிடைத்துள்ள சாபக் கேடு! நிற்க, ராஜபக்ச குடும்பத்தின் கையிலேயே ஆட்சி உள்ளது என்பதைப் போராட்டக்காரர்கள் நன்கு அறிவார்கள். நாடு மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆகையால் ஒரு வெற்றி அல்லது மாபெரும் விபரீதம் இடம்பெறும் வரை, போராட்டக்காரர்கள் தமது போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்பது திண்ணம்.

இதற்குள் கவனிக்கப்பட வேண்டிய யதார்த்தம் என்னவெனில் – 1979ம் ஆண்டு நடைபெற்ற ஈரானிய புரட்சியை எடுத்துக் கொண்டால், அன்றைய ஈரானின் நிலைமையே இன்று இலங்கையில் காணப்படுகிறது. அன்றைய ஈரானிய அரசர், சில மாதங்களாகியும், அவர் தனது ஆட்சியைக் கைவிடுவதற்கு முன்வராத முக்கிய காரணம் என்னவெனில், போராட்ட காலத்தில் அவர் தனது சகல உள்நாட்டு வெளிநாட்டுச் சொத்துக்களை தமதாக்கி கொள்வதற்காகவே காலத்தைக் கடத்தி, இறுதியில் தனது பதவியைத் துறந்தார்.

இதன் காரணமாக, இன்று வரை ஈரானினால், அவ் அரசர் சுவீகரித்த எந்த சொத்துக்களை மீண்டும் பெற முடியவில்லை. இன்றைய இலங்கையிலும் இதே நிலை தான் காணப்படுகிறது.

ராஜபக்சவின் குடும்பத்தினர் முற்றாகப் பதவி விலகும் கட்டத்தில், அவர்கள் பல கேள்விகளுக்குப் பதில் சொல்ல நிர்ப்பந்திக்கப்படுவதுடன், அவர்களில் சிலர் சிறைக்குச் செல்லலாம்.

அத்துடன், இவர்களால் இலங்கையிலிருந்து மோசடியாகச் சேர்க்கப்பட்டு, வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள சொத்துக்கள் – துபாய், லக்சம்பர்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகள், ஆப்பிரிக்காவில் ஷெல்ஸ் தீவு உட்படப் பல நாடுகளில், இவர்களினால் முதலீடு செய்யப்பட்ட சொத்துக்களை, திரும்பக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்பது இவர்களுக்குத் தெரியாத புரியாத விடயம் அல்ல.

தினமென் சதுக்கம்
ஜனாதிபதி கோட்டாபய , வெற்றிகரமாக ரணிலைப் பிரதமராக ஏற்ற ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைத்தால், இவர்களின் கைபொம்மைகளையே நியமிப்பார். இடைக்கால அரசாங்கம் பிரச்சினைகளுக்குத் தீர்வு அல்ல.

இடைக்கால அரசாங்கம் வெற்றிகரமாக அமைக்கப்பட்டால், காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களது நிலை, ஏறத்தாழ 4 ஜூன் 1989 அன்று சீனாவில் உள்ள தினமென் சதுக்கத்தில் நடந்ததைப் போலவே முடிவடையலாம்.

சீனா தினமென் சதுக்கத்தில், மாணவர்கள் 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மே 20 அன்று இராணுவச் சட்டம் அறிவிக்கப்பட்டது, ஜூன் 4 ஆம் திகதி அதிகாலை ஆயிரக்கணக்கான துருப்புக்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பார்வையாளர்களைக் கொல்லத் தொடங்கினர்.

தமிழர்களுக்கு எதிரான போரை, ஆயிரக்கணக்கில் கொன்றொழித்து முடிவுக்குக் கொண்டு வந்தது, கோட்டாபய அரசு என்பதை, காலி முகத்திடலிலும் ஏனைய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

நிலைமை மிக மோசமாகச் செல்லும் நிலையில், சர்வதேச நாடு ஒன்றின் உதவியோடு, இராணுவ புரட்சி நடைபெறலாம். பொறுத்திருந்து பார்ப்போம். வினை விதைத்தவன் வினை அறுப்பான், திணை விதைத்தவன் திணை அறுப்பான்.

வீட்டோ கண்காணிப்பு பொறிமுறை
முன்னாள் ஐ.நா பொதுச்செயலாளர் கோபி அண்ணன் ஒருமுறை கூறினார்: “ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உள்ள பீ 5நாடுகள், ஐ.நாவின் செயல் திட்டங்களை முடக்கக்கூடிய விதமாக வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஐ.நா. நடவடிக்கையைத் தடுக்கும் நாடு, தனது முடிவை விளக்கி, மாற்றுத் தீர்வை முன்வைக்க வேண்டும்.

வீட்டோவை பாவிப்பவர்கள், மற்றைய இரண்டு அல்லது மூன்று நிரந்தர உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே வீட்டோவை பாவிப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார்.

கடந்த 24ம் திகதி ஏப்ரல் மாதம் 2022 அன்று, ஐ.நா.வின் முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அண்ணனின் சிந்தனை, ஓர் அளவு நனவாகியுள்ளது.

உலகின் சிறிய நாடுகளில் ஒன்றான ‘ லிச்சென்ஸ்டைன்’, ஐநா பொதுச் சபையில் சகல அங்கத்துவ நாடுகளின் ஒத்திசையுடன், ஓர் தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்றினார்கள்.
உலகின் மக்கள்தொகை அடிப்படையில், லிச்சென்ஸ்டீன் ஐரோப்பாவில் நான்காவது சிறிய நாடாகவும், உலகில் ஆறாவது சிறிய நாடாகவும் விளங்குகிறது.

மக்கள்தொகை அடிப்படையில் உலகின் மிக சிறிய நாடுகள் பின்வருமாறு
வத்திக்கான் மக்கள்தொகை 800 – நவ்ரு, மக்கள்தொகை 10,876 – துவாலு, மக்கள்தொகை 11,931 – பலாவ், மக்கள்தொகை 18,169 – சான் மரினோ, மக்கள்தொகை 34,017 – லிச்சென்ஸ்டைன், மக்கள்தொகை 38,250 – மொனாக்கோ, மக்கள்தொகை 39,511 – செயின்ட் கிட்ஸ் நெவிஸ், மக்கள்தொகை 53,544 – மார்ஷல் தீவுகள், மக்கள்தொகை 59,610 – டொமினிகா மக்கள்தொகை 72,167.
இவற்றில், ஐ.நா.வின் அங்கத்துவ நாடுகளாக ஒன்பதும். வத்திக்கான், பாலஸ்தினம் போன்று ஐ.நா. வில் பார்வையாளர் நாடாகவுள்ளது. அங்கத்துவ நாடுகள் மட்டுமே ஐ.நா.வில். வாக்குரிமை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. பொதுச் சபையில், சகல அங்கத்துவ நாடுகளின் ஒத்திசையுடன் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, பாதுகாப்புச் சபையில் வீற்றோ உரிமை நாடுகளான அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, ரஷ்யா மற்றும் பிரித்தானியா ஆகிய பீ5 நாடுகளில், எதிர்காலத்தில் யாரும் வீற்றோ பாவிக்கும் சந்தர்ப்பத்தில், வீற்றோ பாவிக்கப்பட்டு பத்து நாட்களில், ஐ.நா. பொதுச்சபையினால் அழைக்கப்பட்டு, இவர்களை வீற்றோ பாவித்ததற்கான நியாயப்பட்டை எடுத்துரைக்க அனுமதிப்பதுடன், மற்றைய நாடுகளும் இவ்விவாதத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும்.

வீட்டோ என்பது லத்தீன். லத்தீன் மொழியில் வீட்டோ என்றால் ‘நான் தடை செய்கிறேன்’. ஐநா சாசனத்திற்கு அமைய பீ5 நாடுகள் இதை ‘சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கு’ மட்டுமே அங்கீகரிக்க அல்லது பயன்படுத்த முடியும். ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு, இந்த பீ5 நாடுகள் கட்டாயம் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் இவ் தீர்மானம் எதிர்காலத்தில் பீ5 நாடுகள் பயன்படுத்தும் பொழுது, மிகவும் எச்சரிக்கையாகப் பாவிப்பார்கள் என்பது ராஜதந்திரிகள், ஆய்வாளர்களின் கருத்தாகக் காணப்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வீட்டோ பாவித்த நாடு மற்றைய ஐ.நா உறுப்பினர்களுடன் பேசுவதற்கும் விவாதம் செய்வதற்கும் இவ் தீர்மானம் வழிவகுத்துள்ளது.
உண்மையைக் கூறுவதனால், இவ் தீர்மானம் பற்றிய உண்மையான நோக்கம், லிச்சென்ஸ்டைன் ஐ.நா. பிரதிநிதியான கிறிஸ்டியன் வெனவேசரின் மனதை 2020ம் ஆண்டளவில் உதயமாகியது.

வெனவேசரின், ஐ.நா.வில் இரண்டு தசாப்த காலமாகச் சேவை செய்த அனுபவம் மற்றும் அறிவைக் கொண்டவர் என்பதனால், ஐ.நா.வின் செயற்பாடுகளிற்கு பீ5 நாடுகளினால் பாவிக்கப்படும் வீட்டோ, எவ்வளவு தடையாக இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொண்டே இவ் தீர்மானம் வரையப்பட்டுள்ளது.

ஐ.நா. பாதுகாப்புச் சபையில், ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் – வீட்டோ அதிகாரத்துடனும், மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து நிரந்தரமற்ற உறுப்பினர்களிற்கு வீட்டோ அதிகாரம் அற்றதாக உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கண்காணிப்பு பொறிமுறை
நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ‘சிறப்பு மிக்கதாகவும், சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அர்த்தமுள்ளதாக’ உள்ளதாக ராஜதந்திரிகள் கூறுகின்றனர். வீட்டோவைப் பயன்படுத்துபவர்களுக்கு இது ஒரு கண்காணிப்பு பொறிமுறையாகவும், அதேவேளை ஐ.நா.வின் சகல உறுப்பு நாடுகளின் கருத்துக்கள், அபிப்பிராயங்களிற்கு இது வழிவகுத்துள்ளது.

பீ5 நாடுகளினால் வீட்டோ பயன்படுத்தப்பட்ட முறையின் வரலாற்றை நாம் ஆராயும்பொழுது, பீ5 நாடுகள் தவிர்ந்த மற்றைய உறுப்பு நாடுகள், ஐ.நா.வின் கைபொம்மைகள் போல் காணப்படுவது நல்ல செய்தி அல்ல. இவ் புதிய தீர்மானம் கடந்த மாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து, ஐ.நா.வில் சீரமைப்பை விரும்பும் நாடுகளுக்கு, இது ஓர் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது எனலாம்.

குறிப்பாக சில நாடுகள் பீ5 நாடுகள் வீட்டோவைப் பயன்படுத்துவதற்கான நியாயமான காரணத்தை அடிப்படையாகக் கொண்டு, ஐ.நா.வின் சாசனத்தைத் திருத்துவதற்கான முயற்சிகள் தேவையென விவாதிக்கின்றனர்.

இந்தத் தீர்மானத்தைப் பற்றிப் பேசும்போது, நியூயார்க்கில் உள்ள பிரெஞ்சு தூதர் நதாலி பிராட்ஹர்ஸ்ட் எஸ்டிவல் “வீட்டோ என்பது ஒரு சிறப்புரிமை அல்ல, ஆனால் ஒரு பொறுப்பு என்பதை வலியுறுத்தி, பிரான்ஸ் வீட்டோவை 1945 முதல் 18 முறை மட்டுமே பயன்படுத்தியதாகவும், மற்றும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதைப் பயன்படுத்தவில்லை என்று குறிப்பிட்டார்.

உக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்பு தொடர்பாக ரஷ்யாவிற்கு எதிராகப் பாதுகாப்புச் சபையில் ஒன்றும் செய்ய முடியாத நிலையில், பொதுச் சபையின் அவசர அமர்வைக் கூட்டுவதற்கு பிரான்ஸ் ஆதரவளித்ததாகக் கூறினார்.

ஐ.நா. சபையின் நிர்வாக மற்றும் செயல்பாட்டுத் தன்மையைப் பாதுகாத்து, ஐ.நா.சபையின் சீர்திருத்தச் செயல்முறைக்கு பிரான்ஸ் முழுமையாக உறுதி பூண்டுள்ளதாகவும், இத்தகைய சீர்திருத்தங்கள் அமைப்பின் முக்கிய மதிப்புகள் மற்றும் ஒவ்வொரு உறுப்புகளின் பொறுப்புகளுக்கும் ஏற்ப இருக்க வேண்டுமெனவும் கூறியதுடன், இது சம்பந்தமாக பொதுச் சபை பாதுகாப்பு கவுன்சிலின் நீதிபதியாகவோ அல்லது அதன் உறுப்பினர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது நிரந்தரமாகவோ ஆக முடியாதெனவும்.

இந்த அடிப்படையில் பிரான்ஸ், மெக்சிகோவுடன் இணைந்து கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களுக்கு வீட்டோவைப் பயன்படுத்துவதற்கான முன்மொழிவை அறிமுகப்படுத்தியதாகவும், பாரிய அட்டூழியங்கள், இனப்படுகொலை குற்றங்கள் போன்றவற்றில் வீட்டோவைப் பயன்படுத்துவதைத் தாமாக முன்வந்து கூட்டாக நிறுத்த வேண்டுமெனவும்.
மனிதக் குலத்திற்கு எதிரான குற்றங்கள் அல்லது போர்க்குற்றங்கள் 2013 ஆம் ஆண்டு முதல், பிரான்ஸ் வீட்டோவைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதற்கு ஆதரவாக உள்ளது. ஒரு பாரிய அட்டூழியம் கண்டறியப்படும் வேளையில், வீட்டோவை பயன்படுத்த மாட்டோம் என்று பீ5 நாடுகள் தாமாக முன்வந்து கூட்டாகக் கூற வேண்டும். இவர்கள் தாமாகவே முன்வந்தால், ஐ.நா. சாசனத்தில் திருத்தம் செய்யும் தேவை ஏற்படாது. 

பிரான்ஸ் முயற்சி
28 செப்டம்பர் 2015, 70வது ஐ.நா. கூட்டத் தொடர் வேளையில், பாரிய அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், நம்பகமான வரைவுத் தீர்மானத்திற்கு எதிராக பிரான்ஸ் ஒருதலைபட்சமாக வீட்டோவைப் பயன்படுத்துவதைக் கைவிட்டதாக ஜனாதிபதி மக்ரோன் அறிவித்தார்.

25 செப்டம்பர் 2018 , 73வது கூட்டத் தொடரின் போது, பாரிய அட்டூழியங்கள் ஏற்பட்ட காரணத்திற்காக வீட்டோ உரிமையைப் பாவிப்பதனால், ஐ.நா உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு (129 நாடுகள்) ஆதரவைப் பெறுவதற்கான இலக்கை ஜனாதிபதி மக்ரோன் முன்மொழிந்தார்.

இதன் தொடர்ச்சியாக, 2020 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் 75வது கூட்டத் தொடரின் போது – பிரான்ஸ் மற்றும் மெக்சிகோ ஆகியவை 105 உறுப்பு நாடுகளின் கையொப்பத்துடன் ஒரு அரசியல் பிரகடனத்தை முன்வைத்தனர்.

வீட்டோ தொடர்பான பிரெஞ்சு நாட்டின் முயற்சி, வீட்டோவை ஒழிக்கும் நோக்கத்துடன் காணப்படவில்லை. இவ் முயற்சியில், பிரான்ஸ் தொடர்ந்து மெக்ஸிகோவுடன் செயல்படுகிறது. பல உறுப்பு நாடுகளும் சிவில் சமூகமும் அட்டூழியங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் செயல்படுகின்றன.

ஆனால் பல ஆசிய, சில ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் பிரான்ஸ் தவிர்ந்த மற்றைய பீ5 நாடுகள் இந்த முயற்சியில் அதிக ஆர்வம் காட்டவில்லை. தீர்மானத்தைப் பற்றிப் பேசுகையில், ஐ.நா. செயல்முறைகள் விதிமுறைகள் குறித்து திருத்தங்களைப் பரிசீலிப்பதும் இவ்வேளையில் முக்கியமாகிறது. பல உறுப்பு நாடுகளும், சிவில் சமூகமும் – ஐ.நா. உறுப்பு நாடுகள் நிர்வாக திருத்தம், வீட்டோவைப் பயன்படுத்துதல், பிராந்திய பிரதிநிதித்துவம் போன்றவற்றை விரும்புகின்றன.
ஐ.நா.வின் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்வதனால் ஐ.நா.பொதுச் சபையின் மூன்றில் இரண்டு ஆதரவுடன், பீ5 நாடுகளின் ஆதரவும் மிக முக்கியமானது. ஆனால் இவை எப்பொழுது நடைபெறும் என்பதற்கான எந்த சைகைகளும் காணப்படவில்லை.

ஐ.நா. பாதுகாப்புச் சபையில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்களின் அடிப்படையில் – ஒன்று பிராந்திய அடிப்படையில் நிரந்தர உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிப்பது பற்றி கடுமையாகப் பேசப்படுகிறது.

காரணம், தற்பொழுது தென் அமெரிக்கா அல்லது லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகள், ஆப்பிரிக்கா அல்லது ஆசிய பசிபிக் நாடுகளிலிருந்து நிரந்தர உறுப்பினர் எவரும் கிடையாது. மற்றைய சிந்தனை மக்கள் தொகை, மொழி அடிப்படையிலானது. ஐநாவில் தற்போது, அரபு, சீனம், ஆங்கிலம், பிரஞ்சு, ரஷ்யன், ஸ்பானிய ஆகிய ஆறு அதிகாரப்பூர்வ மொழிகள் உள்ளன.
இது மொழி மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இருப்பதாகக் கூறப்பட்ட பொழுதிலும், உலகில் இரண்டாவது மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவிற்கும், ஹிந்தி மொழிக்கும் ஐ.நா.வில் அறவே இடமளிக்கப்படவில்லை. இதை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஐ.நா.வில் இந்தியாவையும் ஹிந்தி மொழிக்கும் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது.

இருப்பினும், முன்மொழியப்பட்ட திட்டங்களிற்கு அமைய – ஐரோப்பாவில் ஜெர்மனி, ஆசியாவில் இந்தியா, ஜப்பான் மற்றும் லத்தீன் அமெரிக்க நாட்டிலிருந்து பிரேசில் ஆகிய நாடுகளிற்கு ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவம் கிடைக்க வாய்ப்புக்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. வெளிப்படையாகச் சொல்வதானால், என்று எப்பொழுது இது நிகழும் என்பதற்கான கால வரையோ அறிகுறியோ எதுவும் கிடையாது.

வீட்டோவை பற்றி ஆராயும் இவ்வேளையில், பாதுகாப்புச் சபையில் கூடுதலான வீட்டோவை பாவித்த நாடானா முன்னைய சோவியத் குடியரசு தற்போதைய ரஷ்யா, தனது வீற்றோ அதிகாரத்தை, முன்னைய இலங்கை, தற்போதைய இலங்கை மீதும் இரு பாவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1948 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் திகதியும், பின்னர் 1949ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 13ம் திகதி அன்றைச் சோவியத் குடியரசினால், ஐ.நா.வில் உறுப்பினராவதற்காக முன்னைய இலங்கை, தற்போதைய இலங்கை விண்ணப்பித்த வேளையில், இதற்கு எதிராக ரஷ்யா வீட்டோவை பாவித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!