நெல்லை கல்குவாரி விபத்து: இறந்தவர்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.15 லட்சம் நிவாரணம்!

திருநெல்வேலி அருகே கல்குவாரி பாறைகள் நடுவே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி 3-வது நாளாக நடைபெற்ற நிலையில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த முருகன் என்பவரது சடலம் நீண்ட போராட்டத்துக்குப்பின் மீட்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி அருகே அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் 350 அடி ஆழத்தில் வெடிவைத்து உடைக்கப்பட்ட பாறைகளை, லாரிகளில் அள்ளும் பணியில் தொழிலாளர்கள் கடந்த 14-ம் தேதி நள்ளிரவில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராட்சத பாறை சரிந்து விழுந்ததில், லாரி ஓட்டுநர் கள் செல்வகுமார்(30), ராஜேந்திரன்(35), பொக்லைன் ஓட்டுநர் செல்வம் (27), முருகன் (23), விட்டிலாபுரம் முருகன் (40), நாட்டார்குளம் விஜய் (27) ஆகியோர் சிக்கினர்.
    
அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினரும், காவல்துறையினரும் கடந்த 15-ம் தேதி ஈடுபட்டனர். முருகன், விஜய் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டனர். 17 மணிநேரப் போராட்டத்துக்குப்பின்பு மீட்கப்பட்ட இடையன்குளம் செல்வம், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புகுழுவைச் சேர்ந்த 30 பேர் அடைமிதிப்பான்குளம் வந்தனர். நேற்றுமுன்தினம் அதிகாலையில் மீட்புப்பணியைத் தொடங்கும்போதே, மேலும் பாறைகள் இடிந்து விழுந்தன. அவற்றை அகற்றி எஞ்சியவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் ஆயர்குளத்தை சேர்ந்த லாரி கிளீனர் முருகன் (23) சடலம் மீட்கப்பட்டது. இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

காக்கைகுளம் செல்வக்குமார் மற்றும் ஊருடையான் குடியிருப்பு ராஜேந்திரன் ஆகியோரை மீட்கும் பணி நேற்று பகலில் தொடர்ந்தது. பாறை இடுக்குகளில் லாரிக்குள் மேலும் ஒருவரது சடலம் சிக்கியிருப்பதை மீட்புக் குழுவினர் கண்டறிந்தனர். ஆனால், கனமான பாறைகளுக்கு அடியில் சடலம் சிக்கியிருப்பதால் அதை மீட்பதில் சிக்கல் நீடித்தது. தொடர்ந்து பாறைச்சரிவுகள் காரணமாக மீட்பு பணிகளில் தொய்வு காணப்படுகிறது.

கல்குவாரி பகுதியில் ஆட்சியர் வே. விஷ்ணு தலைமையில் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாறைகளை படிப்படியாக அகற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதனிடையே மீட்பு குழுவினருக்கு ஆலோசனைகளை வழங்க திருச்சியிலிருந்து பெல் நிறுவன தொழில்நுட்பக் குழுவினர் வரவுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

கல்குவாரியில் சிக்கிய லாரி ஓட்டுநர் ஊருடையான்குடியிருப்பு ராஜேந்திரனின் நிலை குறித்து தெரியவில்லை. அவரது மனைவி மணிமேகலை (38) மற்றும் உறவினர்கள் நேற்று 2-வது நாளாக ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து,மீட்பு பணிகளை துரிதப்படுத்தநடவடிக்கை எடுக்க வேண்டும்என்று மனு அளித்தனர். சம்பவஇடத்தை திருநாவுக்கரசர் எம்.பி. பார்வையிட்டார்.
குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், விபத்து ப் பகுதியில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மூலமாக தீவிர மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவ்விபத்தில் உயிரிழந்த முருகன் மற்றும் செல்வன் ஆகிய இருவரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்களது குடும்பத்தாருக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இதுதவிர, தொழிலாளர் நல வாரியம்மூலமாக தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!