தமிழின அழிப்பும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும்

கடந்த 2009ம் ஆண்டு இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் துயரங்கள், கொடுமைகள் தமிழ் மக்களின் மனதில் ஆழப் பதிந்து கிடக்கின்றன. இக்கால கட்டத்தில் இடம்பெற்ற ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் முள்ளிவாய்க்கால் எனும் புனித மண்ணில் உயிர்நீத்தவர்களை நினைவுகூறும் நாளே முள்ளிவாய்க்கால் நினைவு நாளாகும்.

இலங்கையின் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களாலும், புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களாலும் ஆண்டு தோறும் மே மாதம் 18ம் நாள் முள்ளிவாய்க்கால் நினைவுநாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.


தமிழினம் எதிர்கொண்ட இனவெறித்தாக்குதலும் இன அழிப்பும்

2009ஆம் ஆண்டு மே மாத காலப்பகுதியிலேயே இலங்கையின் வடக்கு, கிழக்கு கரையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் எனும் கிராமத்தில் ஈழப்போர் இடம்பெற்றது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி இரவிலிருந்து ஈழ இறுதிப்போர் மிகவும் கொடுமையாக அமைந்திருந்தது.

மே 17, 18, 19 ஆகிய மூன்று நாட்கள் இலங்கை அரசாங்கத்தின் இனவெறி தாக்குதல் அதி உக்கிரம் அடைந்திருந்தது. இதன்போது இலங்கைக்கு இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான், ரஷ்யா உள்ளிட்ட மேலும் 15 நாடுகள் போருக்கு உதவி புரிந்ததாகச் சொல்லப்படுகிறது. 

மூன்றே நாட்களில் ஏறத்தாழ ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் ஈவு இரக்கமில்லாமல் அழிக்கப்பட்டு ஈழத்தில் ஒரே ஓலம். இந்த கொடுமையான காலப்பகுதியை எந்த ஒரு தமிழனாலும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடமுடியாது.

கடந்த 2007-2008 வன்னிப் பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் வான்வழி, தரைவழி என மேற்கொள்ளப்பட்ட கொடூர தாக்குதல்களால் ஏறத்தாழ 4 லட்சம் தமிழ்மக்கள் உயிரைக் கையில் பிடித்தபடி இடம்பெயர வேண்டிய அபாயம்நிலை ஏற்பட்டது.

இவ்வாறு போர் உக்கிரமடையும் நிலையில் பாலகர்கள் கூட பதுங்கு குழிகளிலும், வீதிகளிலும், மரங்களிலும் வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். போர் முற்றி ஒரு கட்டத்தில் பதுங்கு குழிகளே மரணக் குழிகளாக மாறின. 

எங்குபார்த்தாலும் பிணக்குவியல்களும், அதனை அடக்கம் செய்யமுடியாதளவுக்கு இடைவிடாத தாக்குதல்களுமாக மயான பூமியாகியது முள்ளிவாய்க்கால் மணற்பாங்கான பூமி. பல தாய்மார்கள் தன்னுடைய குழந்தைகளை மார்போடு அணைத்த படியே சாகடிக்கப்பட்டனர்.

இவ்வாறு அநியாய யுத்தம் செய்து உயிர்களை அழித்தமையை ஒரு பெருமையாக எண்ணி, 30வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தோம் என மார்தட்டி கொண்டார் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் மக்கள் எதிர்கொள்ளும் சவாலும்
அது அவ்வாறிருக்க உயிர்நீத்த உறவுகளை நிம்மதியாக நினைவுகூரத்தான் முடியுமா என சிந்தித்தால் அவ்வளவு எளிதாக ஆம் என சொல்லிவிடமுடியாது. 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர், முள்ளிவாய்க்கால் என்ற சொல்லும், அதனை நினைவில் கொள்ளும், மே 18 ஆம் திகதியும், தமிழ் மக்களின் ஆன்மாவுடன் ஒன்றுபட கலந்து விட்டது எனலாம்.

போர் முடிவுக்கு வந்த அடுத்தடுத்த ஆண்டுகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைச் செய்ய முடியாதளவுக்கு இராணுவ நெருக்குவாரங்கள், தடைகள் பல காணப்பட்டன.


காலப்போக்கில், நினைவேந்தல் நிகழ்வுகள் தடைகளையும் மீறி நடக்க ஆரம்பித்தன. 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன காலத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களுக்கு பெரிதாக எந்த எதிர்ப்பும் இல்லாமல், பெருமளவான மக்களின் பங்கேற்புடன் நினைவேந்தல் நிகழ்வுகள் நடந்தேறின.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களால் காணப்பட்ட பாதுகாப்பு இறுக்க நிலைக்கு மத்தியிலும் சாதாரணமாக நினைவுகூரல்கள் இடம்பெற்றன.

ஆனால் 2020ஆம் ஆண்டு கோவிட் தொற்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குப் பெரும் சவாலாக மாறியது. இதனைக் காரணம் காட்டி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அரசாங்கம் தடைபோட்டது என்றே சொல்லலாம்.

அதேபோல் 2021ஆம் ஆண்டும் இதே நிலைமை காணப்பட்ட போதிலும் அமைதியான முறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெற்றிருந்தது. 


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது பொதுவான ஒருவிடயம். இது போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூருகின்ற நிகழ்வு. ஆனால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைப் பொறுத்தவரையில் ராஜபக்ச அரசாங்கம் தமக்கு எதிரான ஒன்றாகவே அதனை பார்த்தது. முள்ளிவாய்க்காலில் இறுதிப்போர் நடந்து கொண்டிருந்த போது, ஆட்சியிலிருந்த அரசாங்கமே இப்போது பதவியில் இருக்கிறது.

அந்தப் படுகொலைகளுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என சர்வதேச சமூகத்தினால் வலியுறுத்தப்படுகின்றவர்களே அரசாங்கத்தின் பிரதான தலைவர்களாக மாத்திரமன்றி, முக்கியமான பொறுப்புகளிலும் இருந்தார்கள்.

போருடன் நேரடியாக தொடர்புபட்டிருந்த, போரில் நடந்த மீறல் சம்பவங்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்களாக, அடையாளப்படுத்தப்பட்ட கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் அரசாங்கத்தில் மிக முக்கியமான பதவிகளிலிருந்தார்கள்.

இவ்வாறான நிலையில், தாம் பதவியில் இருக்கின்ற போதே, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுப்பது தமது முகத்துக்கு நேராக விடுக்கப்படுகின்ற சவாலாகவே அவர்கள் உணருவதாகத் தெரிகிறது.

அதனால் தான், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக ஒரு தீபத்தைக் கூட ஏற்றுவதற்கு அனுமதிக்காத வகையில், பொலிஸாரையும், இராணுவத்தினரையும் களமிறக்கியிருந்தது அரசாங்கம்.

இந்த நினைவேந்தலைத் தடுப்பது அரசாங்கத்தின் இலக்காக இருந்த நிலையிலும், அதனையும் மீறி நிகழ்வுகள் ஆங்காங்கே நடத்தப்பட்டிருந்தன. 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் நிலை
இந்நிலையில் இந்த வருடம் தமிழ் மக்கள் திருப்திகரமாக தமது முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொள்வார்களா என கேட்டால் அதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இருப்பினும் தற்போதைய இலங்கையின் அரசியல்களம் ஸ்திரமற்றநிலையில் உள்ளத்துடன், புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளுக்குத் தடையில்லை என அறிவித்துள்ளார்.

30வருட கால யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்தவராக மார் தட்டி கொண்டவர் தற்போது இலங்கையிலேயே மக்களிடம் மறைந்து வாழும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

அதுவும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி உச்சம் தொட்டு அது மக்களின் கழுத்தை நெரிக்கும் நிலை ஏற்பட்டதால் மக்களால் புரட்சி வெடித்து அதன் உச்சக்கட்டமாக யுத்த வெற்றி கண்ட மகிந்த ராஜபக்ச பதவிவிலகியமை அதே மே மாதம் இடம்பெற்றமை கடவுளின் தீர்ப்பு என்று கூறினால் மிக பொருத்தமானதாக இருக்கும்.

அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து ”கோட்டா கோ கம” மற்றும் ”மைனா கோ கம” என போராட்ட களங்களை அமைத்து அங்கு அவர்கள் மேற்கொண்ட போராட்ட வடிவமைப்புகள் மற்றும் செயற்பாடுகள் அத்துடன் அவர்களது கருத்துக்கள் தமிழ் மக்களின் ஈழப்போருக்கான நியாயத்தை எடுத்துக்காட்டியிருந்தது. இவ்வாறு அவர்கள் உணர்ந்துள்ளார் என்பது சிறந்த விடயம் தான்.


அது அவ்வாறிருக்க இந்த மாதம் தமிழ் மக்கள் தமது உறவுகளுக்கான அஞ்சலி அனுஷ்டிப்புகள் மற்றும் நிகழ்வுகளைப் பல பகுதிகளிலும் முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் பொத்துவில் தொடக்கம் முறுகண்டி வரை நடை பேரணி ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஓரளவு சிறப்பாக இடம்பெறும் என நம்பப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் என்பது தமிழ்மக்களின் வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு அடையாளமாக இருக்கின்றமை புதிதல்ல. ஆனால் இந்த வருடம் முதல் அது பெரும்பான்மை சிங்கள மக்களின் மனதிலும் பதியும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. 

ஏனெனில் காலிமுகத்திடலில் இசைப்பிரியாவின் உருவப்படம் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டமை மற்றும் யாழ். பல்கலைக்கழகத்தில் பெரும்பான்மை இனத்தவரால் அஞ்சலி செலுத்தப்பட்டமை போன்ற காரணங்களால் பெரும்பான்மை சிங்கள மக்களின் மனதிலும் தமிழர்களின் ஈழவரலாறு பதியத் தொடங்கியுள்ளது எனலாம். 

இக்கட்டுரை பொது எழுத்தாளர் அமிர்தா அவர்களால் எழுதப்பட்டு தமிழ்வின் தளத்தில் பிரசுரிக்கப்பட்டது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!