மூன்று வேளை உணவு உண்ண முடியாத நிலை ஏற்படும்!

எதிர்காலத்தில் மூன்று வேளை உணவு உண்ண முடியாத நிலை ஏற்படும் என்று எச்சரித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க, எரிபொருட்கள், பாண், பருப்பு ஆகியவற்றின் விலைகள் கணிசமாக அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
    
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில் அனைத்து வகையான எரிபொருட்களும் 400-500 ரூபாய் வரை அதிகரிக்கும் டொலரின் பெறுமதி 400 ரூபாயைத் தாண்டும் என்று தெரிவித்த அவர், பருப்பு 700-800 ரூபாய்க்கும், ஒரு இறாத்தல் பாண் 200-250 ரூபாய்க்கும் விற்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இலங்கையில் தோல்வியடைந்த அரசாங்கமும் ஜனாதிபதியும் இருப்பதாக குற்றஞ்சாட்டிய அவர், இவ்வாறான சூழ்நிலையில் சர்வதேச நிறுவனங்கள் இலங்கைக்கு நிதியளிப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

இலங்கையில் இன்னும் ஒரு மாதத்திற்கு எரிபொருள் கையிருப்பு இருக்கும் என்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்ந்தும் அதிகரிக்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.

பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஒருமித்த கருத்துடைய அரசாங்கம் தேவை என்று கூறிய அவர், அத்தகைய அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் நாட்டின் பிரச்சினைகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தியால் தீர்வுகளை வழங்க முடியும் என்றும் சில இலக்குகளை அடைய மற்ற கட்சிகளின் ஆதரவு தேவை என்றும் குறிப்பிட்டார்.

இந்த செயல்முறைக்கு ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை தேவைப்படும் எனவும் பின்னர் தேர்தலை நடத்த முடியும் எனவும் குறிப்பிட்ட அவர், குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் வரை எரிவாயு பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!