பி.ஜே.பி பாசிச அரசின் தத்துவம் வேறு தமிழர்களின் தத்துவம் வேறு: – திருமுருகன் காந்தி

ஃபாசிசத்துக்குக்கு எதிராகப் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (Popular front of India) சார்பில், சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் உரிமை முழக்க மாநாடு நடைபெற்றது. இதில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசியப் பொதுச் செயலாளர் முகம்மது அலி ஜின்னா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்த முஹம்மது அலி ஜின்னா, ”சமீபகாலமாகப் பி.ஜே.பி என்ற பாசிச ஆட்சி என்.ஏ.ஐ அறிக்கை கொடுத்தாகச் சொல்லி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைத் தடை செய்யத் துடிக்கிறது. அதற்குக் காரணம், அந்த அமைப்பு, இந்தியாவில் எந்தப் பிரச்னை வந்தாலும் முன்னின்று போராடி வருகிறது. அதனால், இந்த அமைப்பைத் தடை செய்யத் தீவிர வேலைகளை பி.ஜே.பி அரசு செய்துவருகிறது. இதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது” என்றார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசியபோதும் இதே கருத்தை முஹம்மது அலி ஜின்னா முன்வைத்தார். இதில் கலந்துகொண்டு பேசிய தொல்.திருமாவளவன், ”முஸ்லிம் வெறுப்பு என்பது மதவெறி யுக்தி. தலித் வெறுப்பு என்பது சாதிவெறி யுக்தி” என்றார். வேல்முருகன் பேசும்போது, ”இந்தியாவில் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு செயல்படுகிறது. இவற்றை அழிக்க பி.ஜே.பி. முயற்சி செய்துவருகிறது. தமிழகத்தில் இளைஞர்கள் இருக்கும்வரை இதை அழிக்க முடியாது” என்றார். திருமுருகன் காந்தி பேசும்போது, ”பி.ஜே.பி ஃபாசிச அரசின் தத்துவம் வேறு. தமிழர்களின் தத்துவம் வேறு. உங்களுடைய தத்துவம் வன்முறையைப் போதிக்கக் கூடியது. எங்கள் தத்துவம் அன்பையும் அமைதியையும் போதிக்கக் கூடியது” என்றார்.

Tags: