நீண்ட கால தீர்வை முன்வைத்துள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்: நெருக்கடி தொடருமென எச்சரிக்கை

தற்போது திட்டமிடப்பட்டுள்ள பிரதான பிரச்சினைகளை அடுத்த 6 அல்லது 7 மாதங்களுக்குள் தீர்க்க முடியுமானால் இலங்கையின் பொருளாதாரத்தை சுமார் 12 மாதங்களில் ஸ்திரப்படுத்த முடியுமென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் வெளிநாட்டு கடனை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையை அடுத்த 6 முதல் 7 மாதங்களுக்குள் நிறைவு செய்ய முடியுமாயின் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,
அந்நிய செலவணியை செலவழிப்பதை விட அந்நிய செலாவணியை ஈட்டும் நாடாக இலங்கையை மாற்றுவதே தற்போதைய நெருக்கடிக்கு நீண்ட கால தீர்வாகும்.

இதன்படி இலங்கையின் அந்நிய செலாவணி ஈட்டும் திறனை நடுத்தர மற்றும் நீண்ட கால அளவில் மேம்படுத்த வேண்டும்.

அவ்வாறு இல்லாதவிடத்து இலங்கையின் தற்போதைய நெருக்கடி தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதேவேளை தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்துவதில் பாரிய சிரமம் ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டு கடன்களை மீள திருப்பி செலுத்துவதற்கு கடன் வழங்கிய தரப்பிடம் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!