ரணிலுடன் இணைந்து நாட்டை மீட்டெடுப்பேன்: அமைச்சர்கள் முன் கோட்டா சபதம்

“புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பேன்.” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களுடன் நடத்திய விசேட கலந்துரையாடலின்போதே அவர் இதனைக் கூறினார் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
என்னால் மாத்திரம் இலங்கையைக் காப்பாற்ற முடியாது

“பொருளாதார நெருக்கடியில் இருந்து என்னால் மாத்திரம் இலங்கையைக் காப்பாற்ற முடியாது. பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணும் திறன் ரணில்விக்ரமசிங்கவுக்கும் உண்டு.

அதனால்தான் அவரைப் புதிய பிரதமராக நியமித்துள்ளதுடன் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சுப் பொறுப்புக்களையும் அவரிடம் ஒப்படைத்துள்ளேன். அதேவேளை, திறமைமிக்கவர்களை அமைச்சரவைக்கு உள்வாங்கி வருகின்றேன்.

அடுத்த வாரத்துக்குள் அமைச்சரவை நியமனம் முழுமை பெறும்

அமைச்சரவை நியமனம் முழுமை பெற்றவுடன் ஜனாதிபதி பதவியிலிருந்து நான் விலகுவேன் என்று சில ஊடகச் செய்திகளைப் பார்த்தேன். எனினும், நான் ஒருபோதும் பதவி விலகமாட்டேன்.

ஜனாதிபதி – பிரதமர் – அமைச்சரவை ஓரணியில் செயற்பட்டால்தான் நாட்டுப் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வுகாண முடியும். இந்தப் புதிய அரசு சவால்களை எதிர்கொண்டு வெற்றிநடை போடும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

இதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். எதிரணியினரை நான் பகைக்கவில்லை. அவர்களையும் அரவணைத்துக்கொண்டு நாட்டுக்காக நாம் அனைவரும் பணியாற்ற வேண்டும்” என ஜனாதிபதி மேலும் கூறினார் என அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.  

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!