கனடாவில் துப்பாக்கியுடன் வலம் வந்த நபர்: சுட்டுக்கொன்ற போலீசார்!

டொராண்டோ நகரின் சுற்றுப்புறத்தில் துப்பாக்கி ஏந்தியபடி தெருவில் நடந்து சென்ற ஒருவரை டொராண்டோ பொலிஸார் சுட்டுக் கொலைசெய்த நிலையில் அருகில் இருந்த பாடசாலைகள் அவரசமாக மூடப்பட்டதாக கூறப்படுகின்றது. வியாழன் மதியம் இடம்பெற்ற இந்த சம்பவத்தை அடுத்து அருகிலுள்ள ஐந்து பாடசாலைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டதாகவும் நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.
  
துப்பாக்கி ஏந்திய நபர் பொலிஸாரை எதிர்கொண்டதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக டொராண்டோ பொலிஸ் தலைவர் ஜேம்ஸ் ராமர் ஒரு ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

எனினும், தொடர் விசாரணையை மேற்கோள்காட்டி, அவர் மேலும் விவரங்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டார். அதேவேளை சம்பவத்தில் கொல்லப்பட்ட இளைஞர் 20 வயதுக்கு உட்பட்டவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வில்லியம் ஜி டேவிஸ் ஜூனியர் பொது பாடசாலையில் இருந்து சுமார் 130 மீட்டர் (426 அடி) தொலைவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். டொராண்டோ மாவட்ட பாடசாலை வாரியத்தின்படி, அனைத்து பாடசாலைகளும் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு மீளவும் திறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலும் டொராண்டோ பொலிஸார் சம்பவ இடத்திற்கு அருகில் சுமார் 300 மீற்றர் வீதியை மூடியதுடன், விசேட புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை அமெரிக்காவின் டெக்சாஸில் துப்பாக்கிதாரி ஒரு தொடக்கப் பாடசாலையில் 19 குழந்தைகளையும் இரண்டு ஆசிரியர்களையும் சுட்டு கொலை செய்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளமை கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!