வடக்கு- கிழக்கில் எந்தவொரு படைமுகாமும் மூடப்படாது – சிறிலங்கா இராணுவத் தளபதி

வடக்கு, கிழக்கில் எந்தவொரு இராணுவ முகாமையும் சிறிலங்கா இராணுவம் மூடப் போவதில்லை என்று, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் சிறிலங்கா இராணுவம் பெருமளவு முகாம்களை மூடவுள்ளதாக, சில ஊடகங்களில் வெளியாகிய செய்திகளை நிராகரித்து நேற்று வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“அடிப்படை ஆதாரமற்ற- பொய்யான ஊடக செய்திகளால், பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படக் கூடாது என்று சிறிலங்கா இராணுவம் கேட்டுக் கொள்கிறது.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய எந்தவொரு முடிவையும், எந்தவொரு சூழ்நிலையிலும், சிறிலங்கா இராணுவம், எடுக்காது. தேசிய பாதுகாப்பு கரிசனைகளுக்கே முன்னுரிமை கொடுக்கும்.

நாட்டின் பாதுகாப்புக்குத் தேவைகளுக்கு பதிலளிக்கும் வகையில், முழு நேரமும் சிறிலங்கா இராணுவம் தயார் நிலையில் இருக்கிறது.

போரின் போது, சிறிலங்கா இராணுவம் கட்டமைப்பு மறுசீரமைப்புகளை மேற்கொண்டதன் மூலம் போரில் வெற்றியைப் பெற்றது.

அதுபோல, தற்போதைய அரசாங்கத்தின், தேசத்தைக் கட்டியெழுப்பும் அபிவிருத்தித் திட்டங்களில் சிறிலங்கா இராணுவம் மகத்தான பங்களிப்பை வழங்குகிறது.

எனினும், நாட்டின் எதிர்காலத்துக்கான சிறிலங்கா இராணுவத்தின் இந்த அர்ப்பணிப்பு தொடர்பாக, சில சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளும், ஊடகங்களும், பொய்யானதும், மலினத்தனமானதுமான பரப்புரைகளை மேற்கொள்கின்றனர்.

இராணுவத்தின் “சரியான அளவைப் பேணும்” செயல் முறை, போரின் போது எவ்வாறு முன்னெடுக்கப்பட்டதோ அதுபோலவே போருக்குப் பின்னரும், செயற்படுத்தப்படுகிறது.

இதன் மூலம், பிரதானமாக, முகாமைத்துவப் பணிகளில் ஈடுபட்ட படையினர் விடுவிக்கப்பட்டு, அவர்களின் வினைத்திறனை இரட்டிப்பாக்கும் வகையில், சிறந்த உற்பத்தித் திறனை ஏற்படுத்தும் களப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முகாம்களில் உள்ள பெரும்பாலான படையினர், அவசர இடர்கால தேவைகள் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டாலும், இந்த செயல்முறைகளுக்காக எந்தவொரு இராணுவ முகாமையும் மூடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

இருந்தாலும், வடக்கு கிழக்கில் உள்ள பாதுகாப்பு ஏற்படுகள் பெருமளவில் தளர்த்தப்படுவதாக சில ஊடகங்கள் பொய்யான அறிக்கைகளை வெளியிடுகின்றன.

நிச்சயமாக, இது பற்றாலியன்களைக் கலைக்கும் நோக்கம் கொண்டதல்ல. ஏனைய பற்றாலியன்களுடனான சமமாக, ஆளணி மற்றும் பொருள் வளங்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கம் கொண்ட மறுசீரமைப்பு மட்டுமே.

சிறிலங்கா அதிபரின் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியாகச் செயற்படும் பெரும்பாலான இராணுவத்தினர், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அதிருப்தி அரசியல்வாதிகளினால் இயக்கப்படும், சில ஊடக நிறுவனங்களே மலினத்தனமான பரப்புரைகளை மேற்கொள்கின்றன” என்றும் அந்த அறிக்கையில் சிறிலங்கா இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!