அரசு ஊழியர்கள் வேட்டி அணிய வேண்டும்: சகாயம் ஐஏஎஸ் வலியுறுத்தல்!

கும்பகோணத்தில் தனியார் பொறியியல் கல்லூரி ஆண்டுவிழாவில் பங்கேற்ற முன்னாள் கோஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான சகாயம் அளித்த பேட்டி: கோ ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனராக இருந்த 2014 கால கட்டத்தில், ஜனவரி 6ம் தேதியை வேட்டி தினமாக அறிவித்து மாநிலம் முழுவதும் தமிழர்களின் கலாச்சார உடையான வேட்டியை அணிய வலியுறுத்தி அனைத்து மாவட்ட கலெக்டருக்கும், கல்லூரி மாணவர்களிடம் இதனை கொண்டு சேர்க்க பல்கலைக்கழகத்திற்கு கடிதம் எழுதினேன்.
    
இதன் வாயிலாக, அன்றைக்கு 20க்கும் மேற்பட்ட கலெக்டர்கள், பாரம்பரிய உடையான வேட்டியை அணிந்தனர். அதுபோலவே, 70க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளும் நம் பாரம்பரிய உடை அணிந்து வந்து பெருமைப்படுத்தினர். அதன்பிறகு இதனை கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் கைவிட்டது. ஆனால், தனியார் நிறுவனங்கள் இதனை லாவகமாக கையில் எடுத்துக்கொண்டு பெரும் வணிகம் பார்த்தது.

ஏழை, எளிய நெசவாளர்களின் வாழ்வு உயர தமிழக அரசு வாரத்திற்கு ஒரு நாளாவது அரசு ஊழியர்களை நம்முடைய கலாச்சார உடையான வேட்டியை அணிந்து வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!