பெரும் நெருக்கடியில் நாடு – கோட்டாபய விடுத்துள்ள பணிப்பு

உணவுப் பாதுகாப்பு தொடர்பான விரிவான அரச-தனியார் கூட்டு வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
உரத் தேவையைப் பூர்த்தி செய்ய பல நாடுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளது.
எனவே உரத் தட்டுப்பாடு அல்லது வேறு எக்காரணம் கொண்டும் யாலப் பருவத்தில் பயிர்ச் செய்கையை கைவிட வேண்டாம் என அனைத்து விவசாயிகளுக்கும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார்.

கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இறக்குமதி, விநியோகம், முறையான முகாமைத்துவம், விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் விழிப்புணர்வு மற்றும் ஒருங்கிணைப்பு என்பனவற்றிற்காக தேசிய உரக் கொள்கையொன்று துரிதமாக வகுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

விவசாய அமைச்சு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
விவசாயிகளின் விருப்பத்திற்கு ஏற்ப இரசாயன அல்லது கரிம உரங்களைப் பயன்படுத்தி பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விவசாய அமைச்சின் பூரண ஈடுபாடு வழங்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்தப்படாத நெல் வயல்களைக் கண்டறிந்து, பச்சைப்பயறு, கௌபி, சோயா உள்ளிட்ட அத்தியாவசியப் பயிர்களைப் பயிரிட ஊக்குவிப்பதன் மூலம், விவசாயிகள் அதிக வருமானம் பெறுவதற்கான வாய்ப்பை வழங்க முடியும்.

மக்காச்சோளம், சோயா மற்றும் ஏனைய பயிர்களை பயிரிடுவதற்காக தேசிய கால்நடை அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான கந்தகாடு பண்ணைகளை விரைவாக விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!