ஞானசார தேரருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்க சட்டமா அதிபர் ஆலோசனை!

பொது பல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக, மத உணர்வுகளை புண்படுத்தும் வார்த்தைப் பிரயோகங்களை செய்தமை தொடர்பில் தண்டனை சட்டக் கோவையின் 291 அ அத்தியாயத்தின் கீழ் குற்றச் சாட்டுக்களை முன் வைக்குமாறு சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்
    
2014.04.12 அன்று மதங்களுக்கு இடையே வேற்றுமைகள் தோன்றும் வகையில் ஊடகங்களிடம் புனித அல் குர் ஆனை அவமதிக்கும் வண்ணம் ஞானசார தேரர் கருத்துக்களை வெளியிட்டதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய இந்த ஆலோசனையை சட்ட மா அதிபர், விசாரணைகளை முன்னெடுத்த கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு வழங்கியுள்ளார்.

அல்குர் ஆன் அவமதிப்பு தொடர்பில் கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்ட நிலையில் அதன் விசாரணைகள் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு கோட்டை நீதிவான் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இது தொடர்பில் 2014.05.05 அன்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஞானசார தேரர் சட்டத்தரணி ஒருவர் ஊடாக சரணடைந்திருந்த நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
அவ்வாறான நிலையில், குறித்த அவ்ழக்கு இன்று கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது, விசாரணையாளர்களுக்காக மன்றில் ஆஜரான பொலிஸ் அதிகாரி, விசாரணைகள் நிறைவு பெற்று சட்ட மா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டிருந்த நிலையில், ஞானசார தேரருக்கு எதிராக தண்டனை சட்டக் கோவையின் 291 அ அத்தியாயத்தின் கீழ் குற்றச்சாட்டு தாக்கல் செய்ய ஆலோசனை கிடைக்கப் பெற்றுள்ளதாக மன்றுக்கு தெரிவித்தார்.

அதன்படி அதனை தாக்கல் செய்ய திகதியொன்றினை தருமாறு அவர் கோரினார். இதன்போது மன்றில், இந்த விவகாரத்தில் பொலிஸில் முறைப்பாடு செய்தவர்களுக்காக சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், பாதிக்கப்பட்ட தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தி மன்றில் ஆஜராகியிருந்தார்.

ஞானசார தேரருக்காக சட்டத்தரணி பிரேமநாத் சி தொலவத்த மன்றில் முன்னிலையானார். இந் நிலையில் பொலிசாரின் கோரிக்கை பிரகாரம், ஞானசார தேரருக்கு எதிரான குற்றச்சாட்டை தாக்கல் செய்ய வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!