வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சிலைகள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு!

தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிற்கு கடத்தப்பட்ட, 10 புராதன கோயில் சிலைகளை மத்திய அரசு மீட்டுள்ளது. மீட்கப்பட்ட துவாரபாலகர், நடராஜர், விஷ்ணு, ஸ்ரீதேவி, சிவன் பார்வதி சிலைகள், குழந்தைப் பருவ சம்பந்தர், உள்பட 10 சிலைகளை மத்திய கலாச்சாரத்துறை மந்திரி கிஷண் ரெட்டி, தமிழக அரசிடம் ஒப்படைத்தார்.
    
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல் முருகன், கலாச்சாரத் துறை இணை மந்திரிகள் மீனாட்சி லேகி, அர்ஜூன் ராம் மேஹ்வால் ஆகியோர் முன்னிலையில், தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு இந்தச் சிலைகளைப் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் மத்திய மந்திரி கிஷண் ரெட்டி பேசியதாவது:
கடந்த 8 ஆண்டுகளில் நமது பழங்கால நாகரீகப் பெருமையை பேணிக் காக்கவும், நமது கலாச்சாரம் மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தைப் பாதுகாத்து இந்திய அறிவாற்றல் மற்றும் மரபுகளை உலகெங்கும் பரவச் செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, நமது கடவுள் சிலைகளை தாயகத்திற்கு மீட்டு வந்துள்ளோம். மேலும் உலக நாடுகளின் தலைவர்களுடன் பிரதமரின் தனிப்பட்ட நட்புறவு காரணமாக, நம்நாட்டிலிருந்து கடத்தப்பட்ட சிலைகளை அடையாளம் காணும் பணியை ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகள் விரைவாக மேற்கொண்டு, அவற்றை திருப்பி ஒப்படைக்கும் வரை, ஒத்துழைப்பு அளித்து வருகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!