ரணில் தீர்வு காண்பார் என்ற நம்பிக்கை இல்லை!

பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை கிடையாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
    
இலங்கை கம்யூனிச கட்சி காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றவுடன் உலக நாடுகள் வரிசையில் நின்று இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் என ஒருசிலர் எதிர்வு கூறினார்கள்.

ஆனால் தற்போது அவ்வாறான நிலைமையினை காண முடியவில்லை. எதிர்வரும் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதமளவில் பாரிய உணவு தட்டுப்பாட்டை எதிர்க்கொள்ள நேரிடும் என அரசாங்கம் குறிப்பிடுகிறது.

உணவு தட்டுப்பாட்டை வெற்றிக்கொள்ள நடைமுறைக்கு சாத்தியமான திட்டங்களை அரசாங்கம் இதுவரை செயற்படுத்தவில்லை.

சமையல் எரிவாயு பிரச்சினையை நகர்புற மக்களை போல் கிராமபுற மக்களும் எதிர்க்கொண்டுள்ளார்கள்.எரிவாயு விநியோக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமைக்கு தீர்வு காண அரசாங்கம் நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்கவில்லை.
நட்பு நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்வதற்கு பதிலாக நட்பு நாடுகளை பகைத்துக் கொள்ளும் சூழ்நிலைமை தற்போது காணப்படுகிறது.

சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் இலங்கை சர்வதேச மட்டத்தில் தீர்மானமிக்க தருணங்களை எதிர்க்கொண்ட வேளையிலும்,பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொண்ட போதும் முழுமையான ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்கியுள்ளன.

இவ்விரு நாடுகளும் இலங்கையின் பிரதான நட்பு நாடுகளான உள்ளன.சீனாவுடன் பகைமையை ஏற்படுத்தியுள்ள தருணத்தில் தற்போது ரஸ்யாவையும் பகைத்துக்கொள்ளும் தன்மை தற்பேது காணப்படுகிறது.

எரிபொருள்,உரம்,டொலர் உள்ளிட்ட பல பிரச்சினைகளை இலங்கை எதிர்க்கொண்டுள்ள போது ரஸ்யாவின் ஒத்துழைப்புடன் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். ரஸ்யாவின் ஏரோபுளொட் விமானம் இலங்கையில் இருந்து வெளியேற கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் இலங்கைக்கு வருகை தரும் ரஸ்யாவின் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடையும்.

ரஸ்யாவின் விமானத்திற்கு தடையுத்தரவை பிறப்பிக்கும் அதனால் சுற்றுலாத்துறைக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து நீதிமன்றம் அவதானம் செலுத்தாமலிருப்பது வியப்பிற்குரியது.

தற்போதைய நெருக்கடியான நிலையில் சகல தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். இருப்பினும் தற்போது அந்த பொறுப்பான தன்மையை நிறைவேற்று துறையிலும்,சட்டவாக்கத்துறையிலும்,நீதித்துறையிலும் அவதானிக்க முடியவில்லை.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!