“நல்லாட்சி அரசாங்கம் மக்களின் எதிர்ப்பையே சம்பாதிக்கிறது”

மாகாண சபைத் தேர்தலை தொடர்ந்தும் பிற்போடுவதனூடாக நல்லாட்சி அரசாங்கம் தொடர்ச்சியாக மக்களின் எதிர்ப்பையே சம்பாதித்து வருகிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஸீர் அஹமத் தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இது தொடர்பாக மேலும் கூறுகையில்,

இன்று மாகாண சபைகள் மத்திய அரசால் பந்தாடப்பட்டு வருகின்றது. இதன் காரணமாகத்தான் நான் மாகாண சபைகளின் தேர்தல்களை நடத்துவது குறித்து அந்தந்த மாகாண சபைகளே தீர்மானிக்க அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தேன்.

மக்களின் வாக்குகளினால் தெரிவான ஒரு ஆட்சி நிறுவனத்தை அந்த மக்களின் விருப்பின்றி தன்னிச்சையாக கையாளும் உரிமையை மத்திய அரசுக்கு மக்கள் வழங்கவில்லை. இவ்வாறு மேற்கொள்ளப்படுவது ஜனநாயகத்திற்கு விரோத செயலாகும்.

ஆகவே மாகாண சபைகளின் கால எல்லைக்குள்ளோ அதன் நிறைவிலோ தேர்தலை நடத்தும் அதிகாரம் அந்தந்த மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதுடன் மாகாண சபைகள் அதில் ஏதேனும் இழுத்தடிப்புக்களை செய்யுமாயின் அதில் மத்திய அரசு தலையிடும் அரசியலமைப்பு சிறந்ததாகும்.

எனவே தற்போது பிற்போடப்பட்டுள்ள தேர்தல்களை தேர்தல்களை பழைய முறையில் உடனடியாக நடத்துவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும். அவ்வாறில்லாது புதிய முறையில் நடத்துவதாக கூறி மேலும் தேர்தல் பிற்போடப்பட்டாலோ அல்லது சிறுபான்மையினருக்கு எதிராக புதிய முறைமையில் நடததினாலே நாம் வீதிக்கு இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!