21 ஐ நிறைவேற்ற விடமாட்டார் பசில்!

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தினை நிறைவேற்ற பஷில் ராஜபக்ஷ ஒருபோதும் இடமளிக்க மாட்டார். இரட்டைக் குடியுரிமையை நீக்கிக் கொள்ளவோ, பாராளுமன்றத்திலிருந்து வெளியேறவோ அவர் விரும்பவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி யின் பாராளுமன்ற உறுப்பினர் அஷோக அபேசிங்க தெரிவித்தார்.
    
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் ,
தனக்கு ஆட்சி நிர்வாகம் புரியவில்லை என்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு சரியான நேரத்தில் செல்லவில்லை என்றும் கூறிய நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பதவி காலம் முடியும் வரை வெளியேறப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி பதவி விலகவிருந்த சந்தர்ப்பத்தில் , ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை ஏற்று அரசாங்கத்தை ஆதரித்து அவர்களை காப்பாற்றும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
இன்று இலங்கை உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடாகியுள்ளது. ஆசியாவின் ஐம்பதாண்டு கால வரலாற்றில் வங்குரோத்தடைந்த நாடாக இலங்கை மாறியுள்ளது.

வரிசை யுகத்தை அகற்ற வந்த அமைச்சர்களுக்கு என்ன நடந்தது? ஊழலோடும் மோசடிகளோடும், வழக்குகளோடும் தொடர்புபட்டவர்களே ஆளும் தரப்பில் உள்ளனர். அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு என்ன நடந்துள்ளது? அவருக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவரே ஆளுந்தரப்பின் பிரதம கொறடாவாகவும் செயற்படுகின்றார்.

இவ்வாறானதொரு நிலையில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவாக உள்ளார். எமது நாட்டை உலகம் ஏற்றுக்கொள்ளுமா? அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளுமா? இந்த தோல்வியடைந்த ஆட்சியாளர்களுக்கு மேலும் சிக்கல் ஏற்படும் வரை பணம் அனுப்ப மாட்டோம் என வெளிநாடுகளிலுள்ள இலங்கை தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்க தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு வந்து ராஜபக்சக்களை பாதுகாக்கின்றனர் என்பது மக்களுக்கு நிரூபணமாகியுள்ளது. 21 ஆவது திருத்தத்தினை நிறைவேற்ற பஷில் ராஜபக்ஷ ஒருபோதும் இடமளிக்க மாட்டார். இரட்டைக் குடியுரிமையை நீக்கிக் கொள்ளவோ , பாராளுமன்றத்திலிருந்து வெளியேறவோ அவர் விரும்பவில்லை என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!