அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் 11 வயது சிறுமி அளித்த பகீர் வாக்குமூலம்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை மொத்தமாக உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிர் தப்பிய 11 வயது சிறுமி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் சாட்சியம் அளித்துள்ளார்.

தமது நண்பரின் சடலத்தில் இருந்து ரத்தத்தை தம் மீது பூசிக்கொண்டு, இறந்ததாக நடித்து உயிர் தப்பியதாக அந்த சிறுமி குறிப்பிட்டுள்ளார். மேலும், பாடசாலைகள் பாதுகாப்பாக இருப்பதாக தாம் கருதவில்லை எனவும், இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் மேலும் நடக்கலாம் என அந்த நான்காவது வகுப்பு மாணவி அச்சம் தெரிவித்துள்ளார்.
    
சம்பவத்தின்போது தமது ஆசிரியர் அருகே சென்ற அந்த கொலைகாரன், பட்டப்பகலில் குட் நைட் கூறிவிட்டு, அவர் தலையில் துப்பாக்கியால் சுட்டதை தாம் நேரில் பார்த்ததாக சிறுமி
குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் தமது வகுப்பு தோழர்கள் சிலரை கொன்று தள்ளிய அந்த கொலைகாரன், த,மக்கு அருகே பயத்தில் உறைந்து போயிருந்த நண்பன் மீது துப்பாக்கியால் சுட்டதாகவும், அவன் பார்வை எப்போது வேண்டுமானாலும் தம் மீது திரும்பலாம் என அஞ்சியதாக சிறுமி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்தே, உடல் முழுவதும் ரத்தத்தை பூசிக்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இறந்தது போன்று நடித்ததாகவும், அப்போது ஆசிரியரின் மொபைலில் இருந்து 911 இலக்கத்திற்கு அழைப்பு விடுத்ததாகவும் சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

மே 24ம் திகதி, சால்வடார் ராமோஸ் என்ற 18 வயது இளைஞர் உவால்டேயில் உள்ள ராப் தொடக்கப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 19 நான்காவது வகுப்பு மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

இச்சம்பவத்தில் உயிர் தப்பிய 11 வயது மாணவி Miah Cerrillo நாடாளுமன்ற சிறப்பு குழு முன்னிலையில் வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!