நல்லாட்சி அரசின் வீடமைப்புத் திட்டத்தை கைவிட்டது அரசாங்கம்!

நல்லாட்சி அரசாங்க காலத்தில் வடக்கு கிழக்கில் ஆரம்பிக்கப்பட்டு பூரணப்படுத்த முடியாமல் போன ஆயிரக்கணக்கான வீடுகள் இன்னும் இருக்கின்றன.

அரசாங்கம் இந்த வீடுகளை பூரணப்படுத்தாமல் இருப்பது அந்த மக்களை அரசியல்ரீதியாக பழிவாங்கலாகும். எனவே பூரணப்படுத்தாமல் இருக்கும் வீடுகளை அரசாங்கம் பூரணப்படுத்தி கொடுப்பதா இல்லை என்பதை தெரிவிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் இ.சாணக்கியன் தெரிவித்தார்.
    
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது,இதனை தெரிவித்த அவர்-

வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக்களே அதிகம் வீடற்ற பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருகின்றனர். குறிப்பாக 30 வருட யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கு மக்களின் வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டன.

அதனால் அந்த மக்களுக்கு கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் எமது கட்சி அவர்களுடன் கலந்துரையாடி வீடமைப்பு அதிகாரசபையுடன் இணைந்து பாரிய வீடமைப்பு வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்தது.

இவ்வாறு பல வீடுகளின் நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இடை நடுவில் விடப்பட்டிருக்கின்றன . நல்லாட்சி அரசாங்க காலத்தின் பின்னர் கைவிடப்பட்ட இதன் வேலைகள் அவ்வாறே தொடர்ந்து இருக்கின்றன . இது இந்த அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கலாகும்.

அத்துடன் இந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட கிராமத்துக்கு ஒரு வீடு என்ற வேலைத்திட்டத்தின் கீழாவது இந்த வீடுகளை பூரணப்படுத்தி தருமாறு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் உட்பட பல தரப்பினரிடமும் கேட்டுக்கொண்டிருந்தோம்.

அப்போது, அந்த வீடுகள் நல்லாட்சி அரசாங்க காலத்தில் ஆரம்பிக்கப்பட்டவை. நாங்கள் முடித்துத் தரமாட்டோம் என தெரிவிக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு மக்கள் பெரும்பாலும் விவசாயம்,. கடற்தொழில் போன்ற சாதாரண தொழிலை மேற்கொண்டு வருகின்றவர்கள்.

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி, கட்டிட பொருட்களின் விலை அதிகரிப்பு போன்ற சிக்கலுக்கு மத்தியில் அந்த மக்கள் எவ்வாறு அவர்களது வீடுகளை கட்டிக்கொள்வது என கேட்கின்றேன்.
அந்த பிரதேசத்தில் 4 ஆயிரத்துக்கும் அதிக வீடுகள் இருக்கின்றன. அதனால் வீடமைப்பு அமைச்சினால் இந்த வீடுகளை பூரணப்படுத்தி தர முடியுமா அல்லது அந்த மக்கள் வறு வழிகளை பார்த்துக்கொள்ளவேண்டும் என தெரிவி்கின்றீர்களா என்பதை தெரிவிக்கவேண்டும் என்றார்.

இதற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பதிலளிக்கையில், வடக்கு கிழக்கு என யாரையும் நாங்கள் பிரித்து பார்ப்பதில்லை. யாரையும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை அரசாங்கம் செய்வதில்லை. கடநத அரசாங்கத்தின் 5 வருட காலத்தையும்விட அதிக வீடுகளை நாங்கள் கடந்த இரண்டு வருடங்களில் கட்டிக்கொடுத்திருக்கின்றோம். அதனால் எமது வீடமைப்பு அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் வேலைத்திடடங்களை செய்து முடிப்போம் என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!